Search

Custom Search

Thursday, March 27, 2008

லேப்டாப் விற்பனையால் யு.பி.எஸ் சந்தை சரிவு

லேப்டாப் எனப்படும் மடிக் கணினிகளை தற்போது தனி நபர்கள் அதிகம் பயன்படுத்தத் தொடங்கி இருப்பதால், மின்தடை தொந்தரவுகளை எதிர்கொள்ளும் யு.பி.எஸ்-களின் விற்பனை சரிந்து வருவதாக தகவல் தொழில் நுட்ப ஹார்டுவேர் உயர் மட்ட அமைப்பான மெய்ட் தெரிவித்துள்ளது.
அதாவது குறைந்த உபயோக யு.பி.எஸ்-களின் விற்பனைச் சந்தை கடந்த அரையாண்டில் 5 சதவீதம் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளதாகவும், இதில் குறிப்பாக வீடுகளில் பயன்படுத்தும் கணினிகளுக்கான யுபிஎஸ், 69 சதவீத சந்தையைக் கொண்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. எஞ்சிய 31 சதவீதம் மட்டுமே வர்த்தக நிறுவனங்களுக்கான சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மடிக் கணினிகளின் விற்பனை பெருகி வருவதால், வீட்டு உபயோக மற்றும் சிறு பயன்பாட்டு கணினிகளுக்கான யு.பி.எஸ் விற்பனை 42 சதவீதம் சரிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த அரையாண்டில் கணினி விற்பனையைப் பொருத்தவரை 3 சதவீத வளர்ச்சியை மட்டுமே கண்டுள்ளது. ஆனால் இதற்கு தக்கவாறான யு.பி.எஸ் விற்பனை நடைபெறவில்லை என்று இந்த துறையைச் சேர்ந்த நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் இதே காலக் கட்டத்தில் மடிக் கணினிகளின் விற்பனை மொத்த கணினி விற்பனைச் சந்தையில் 21 சதவீதம் அதிகரித்துள்ளது. சுமார் 4 ஆண்டுகளுக்கு முன்பு மடிக் கணினிகள் இந்த சந்தையில் வெறும் 3 சதவீத விற்பனையை மட்டுமே கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மடிக் கணினிகளில் திடீர் மின் தடை போன்றவற்றால் வேலை பாதிப்பு ஏற்படாது. ஏனெனில் இது ரீசார்ஜ் செய்யக்கூடிய பேட்டரியால் இயங்குகிறது.
ஆனால் மிகப்பெரிய நிறுவனங்கள் தரவுகளை பாதுகாக்க பயன்படுத்தும் கணினிகளுக்கான யு.பி.எஸ் விற்பனை சுமார் 30 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது. அதாவது 20 கே.வி.ஏ மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட யு.பி.எஸ் சந்தை வளர்ச்சி அடைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
ஏன் பெரிய நிறுவனங்கள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தலாமே என்று நினைக்கலாம். ஆனால் நீண்ட நேரம் ஜெனரேட்டர்களை பயன்படுத்த முடியாது, மேலும் அது காற்றில் மாசையும், அதிகமான சப்தங்களையும் எழுப்பக்கூடியது. ஆனால் செலவு குறைவுதான்.
ஆனால் யு.பி.எஸ் தயாரிப்பு நிறுவனங்கள் கவலை அடையவேண்டியதில்லை பெரு நகரங்களில் குறைந்த பயன்பாட்டு யு.பி.எஸ்களின் விற்பனை குறைந்தாலும், மற்ற சிறு நகரங்களில் இதன் விற்பனை கடுமையாக அதிகரித்துள்ளது.
ஆனால் எதிர்காலத்தில் சிறிய பயன்பாட்டிற்கான யு.பி.எஸ்கள் விற்பனையை விட அதிகபட்ச உபயோக கணினிகளுக்கான யு.பி.எஸ்களின் விற்பனை இரு மடங்கு அதிகரிக்கும் என்று யு.பி.எஸ். தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
ஏனெனில் பெருகும் உள்கட்டமைப்பு திட்டங்கள், சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், சில்லரை விற்பனை நிலையங்களின் பெருக்கம், வங்கித் துறையின் வளர்ச்சி மற்றும் மின் நிர்வாக திட்டங்கள் ஆகியவற்றால் யு.பி.எஸ்-களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளதாக இந்த துறையை சார்ந்தவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

No comments: