
அத்தியாவசிய பொருட்களின் விலையுயர்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க, பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் மத்திய அமைச்சரவை திங்களன்று கூட உள்ளதாக நிதித்துறைச் செயலர் சுப்பாராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் பணவீக்க விகிதம் 6.68 சதவீதமாக உயர்ந்துள்ளது. கடந்த 13 மாதங்களை கணக்கில் கொண்டால் இதுவே மிக உயர்ந்த பணவீக்க அளவாகும்.
எனவே நாளை கூடும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில், 60 அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
மேலும், புதனன்று, உயர்நிலை குழு கூட்டமும் நடைபெற உள்ளதாகவும், இக்கூட்டத்தில் அத்தியாவசியப் பொருள்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராயப்படும் என்றும் வர்த்தகத்துறைச் செயலர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என இடதுசாரிகள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ள நிலையில், இப்பிரச்சனை தொடர்பாக விவாதிக்க மத்திய அமைச்சரவை திங்களன்று கூடுவது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment