இணையதள உலகில் ஸ்பைவேர் என்று அழைக்கப்படும் கேடு விளைவிக்கும் மென்பொருள்கள் பலரை அடிக்கடி பிரச்சனைக்குள்ளாக்குவது பற்றி நாம் கேள்விப்பட்டுள்ளோம். அதாவது உங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை நீங்கள் அறியாமலேயே அடுத்தவருக்கு அனுப்பும் தீங்கான மென்பொருள்தான் ஸ்பைவேர் என்று அழைக்கப்படுகிறது.
ஆம். கணினி முன் அமரும் நாம் தீய நோக்கம் கொண்ட சிலரால் கண்காணிக்கப்படுகிறோம். உங்கள் கணினி இந்த மென்பொருளால் பாதிக்கப்பட்டால், உங்கள் பெயர், கடவுச் சொல், வங்கிக் கணக்கு விபரம், கடன் அட்டை விபரம் ஆகியவை களவு போகும் அபாயம் உள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகின் எந்த மூலையில் இருந்து கொண்டும் உங்கள் சொந்த தகவல்களை வைத்துக் கொண்டு மறைமுக வேலைகளில் யார் வேண்டுமானாலும் ஈடுபட முடியும் என்பதே உண்மை.
இந்த ஸ்பைவேர்களை நீக்குவது கடினம். தன்னைத்தானே ஒரு கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளும் இந்த மென்பொருட்களை கண்டறிவதும் கடினம். இந்த ஸ்பைவேர்களை அகற்ற இதோ சில யோசனைகள்:
பாப்-அப் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம்: இணையதளத்திற்கு செல்லும்போது உண்டாகும் பாப்-அப்-களை ஒரு போதும் கிளிக் செய்ய வேண்டாம். அதேபோல் ஆமாம் அல்லது இல்லை என்ற பட்டன்களை ஒரு போதும் கிளிக் செய்யாதீர்கள். பாப்-அப் தடுப்பான் வசதியை பயன்படுத்தவும்.
எதை டவுன்லோடு செய்கிறீர்கள் என்பதில் கவனம் தேவை: இலவச மென்பொருள்களை டவுன்லோடு செய்தால் அதில் ஸ்பைவேர் இருக்கலாம் எச்சரிக்கை. இதில் ஸ்பைவேர் இருக்காது என்று ஒரு போதும் நினைத்து விட வேன்டாம். இசை மற்றும் சினிமா கோப்புகளை ஃபைல் ஷேரிங் நிரல்களிலிருந்து டவுன்லோடு செய்யும்போது ஸ்பைவேர் உங்கள் கணினிகளில் இன்ஸ்டால் ஆகும் அபாயம் உள்ளது.
ஸ்பேம் மெயில்களுக்கு பதில் அளிக்காதீர்கள்: ஒரு சில மின்னஞ்சல்கள் ஸ்பைவேரை அழிக்கும் மென்பொருள் என்று அறிவிப்புடன் உங்களுக்கு வரும். இவை மோசடியான மின்னஞ்சல்களாக இருக்க வாய்ப்புண்டு. இதனை திறந்தாலே போதும் ஸ்பைவேர் உங்கள் கணினிகளில் வந்து உட்கார்ந்து விடும்.
விண்டோஸ் சாஃப்ட்வேர்களை அவ்வப்போது மேம்படுத்தவும்: மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் அப்டேட் பாதுகாப்பு குறித்த விவரங்களை அளிக்கிறது. அதன்படி உங்கள் கணினிகளை மேம்படுத்தி வந்தால் ஸ்பைவேர் ஆபத்திலிருந்து ஓரளவிற்கு தப்பிக்கலாம்.
ஃபயர்வால் இன்ஸ்டால் செய்க: உங்களுக்கு தெரியாமல் உங்கள் கணினிகளில் நுழையும் மென்பொருட்களை ஃப்யர்வால் கண்டுபிடிக்கும். இது உங்கள் தரவுகள் அனைத்தையும் கண்காணிக்கும். விண்டோஸ் எக்ஸ்.பி. உள்ளுக்குள்ளேயே ஃபயர்வால் வசதியுடன் உள்ளது. அதனை இயக்கிவிட வேண்டியதுதான் உங்கள் வேலை.
ஸ்பைவேர் அகற்றும் கருவிகளை பயன்படுத்தவும்: ஸ்பைவேர் தடுப்பு புரோகிராம்கள் கணினியில் நுழையும் ஸ்பைவேர்களை அகற்றுவதில் சிறந்தது. இதில் இலவசமாக நிறைய கிடைக்கிறது என்றாலும், இலவச மென்பொருள்களே இன்னொரு ஸ்பைவேராக இருக்க வாய்ப்புண்டு. அதாவது நன்கு பரிசோதனை செய்யப்பட்ட, அங்கீகாரம் பெற்ற ஸ்பைவேர் அகற்றும் கருவியை பயன்படுத்துவதே சிறந்தது.
கண்காணிப்பிலிருந்து தப்பித்து, பாதுகாப்புடன் கணினியில் சொந்த வேலைகளில் ஈடுபட இந்த துறையை சார்ந்த நிபுணர்களிடமும் கலந்தாலோசிக்கலாம்.
No comments:
Post a Comment