
தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் நடந்த 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-1 என்ற போட்டிக்கணக்கில் இந்தியா சமன் செய்துள்ளது.
கடந்த 11ம் தேதி துவங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா, முதல் இன்னிங்சில் 265 ரன் சேர்த்தது. இந்திய தரப்பில் இஷாந்த் சர்மா, ஹர்பஜன்சிங் தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.
போட்டியின் 2ம் நாளான நேற்று முதல் இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 288 ரன் சேர்த்திருந்தது. ஸ்ரீசாந்த் 9 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில், இந்தியா 325 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தென்ஆப்பிரிக்க பந்து வீச்சை விளாசிய, இஷாந்த் சர்மா-ஸ்ரீசாந்த் ஜோடி கடைசி விக்கெட்டுக்கு 46 ரன் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 60 ரன் முன்னிலை பெற்றது.
அடுத்து களமிறங்கிய தென்ஆப்ரிக்கா, தனது 2வது இன்னிங்சில் 121 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கேப்டன் ஸ்மித் அதிகபட்சமாக 35 ரன், பிரின்ஸ் ஆட்டமிழக்காமல் 22 ரன் சேர்த்தனர்.
இந்திய தரப்பில் ஹர்பஜன்சிங் 4 விக்கெட், வீரேந்தர் சேவாக் 3 விக்கெட், இஷாந்த் சர்மா 2 விக்கெட் வீழ்த்தினர்.

வெற்றி பெற 62 ரன் மட்டுமே தேவை என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் சேவாக் 22 ரன்னிலும், ஜாபர் 10 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து விளையாடிய கங்குலி-டிராவிட் ஜோடி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
இன்னிங்சின் 13வது ஓவரில் இந்தியா 2 விக்கெட் இழப்புக்கு 64 ரன் எடுத்தது. கங்குலி 13 ரன், டிராவிட் 18 ரன் எடுத்தனர்.
முதல் இன்னிங்சில் 87 ரன் குவித்த கங்குலி ஆட்ட நாயகன் விருது பெற்றார். இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 19 விக்கெட்களை கைப்பற்றிய ஹர்பஜன்சிங் தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் தென்ஆப்ரிக்காவுக்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை, இந்தியா 1-1 என்ற போட்டிக்கணக்கில் சமன் செய்துள்ளது. மகேந்திர சிங் தோனி கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment