![]() |
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில் தமிழகத்தின் நிலையை விளக்கியதுடன், இத்திட்டத்தை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என கர்நாடகாவுக்கு அறிவுரை வழங்க வேண்டுமென பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அமைச்சர் டி.ஆர்.பாலு நேரில் வலியுறுத்தினார்.
டெல்லியில் இன்று பிரதமரை சந்தித்த மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு, ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நேற்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலையும், முதல்வர் கருணாநிதி வழங்கிய கடிதத்தையும் அளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக இரண்டு மாநிலங்களும் கலந்து கொண்ட கூட்டத்தையடுத்து கடந்த 1998ம் ஆண்டு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற தேவையான அனைத்து அனுமதியையும் மத்திய அரசு தமிழக அரசுக்கு வழங்கியதை டி.ஆர்.பாலு பிரதமரிடம் சுட்டிக்காட்டினார்.
மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, நகர்ப்புற விவகாரம் மற்றும் கிராம மேம்பாட்டுத் துறை அமைச்சகங்களிடம் இருந்தும் தமிழக அரசு தேவையான அனைத்து அனுமதிகளையும் பெற்றுள்ளதாக பாலு தெரிவித்தார்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் அவசியம் என்றும், இதற்காக ஜப்பான் வங்கி ரூ.1,334 கோடி நிதி வழங்க முன்வந்துள்ளதையும் கூறிய அவர், வறட்சி பகுதிகளான கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க முடியும் என்றும் பிரதமரிடம் விளக்கியுள்ளார்.
முன்னதாக இன்று முன்னாள் கர்நாடகா முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து மத்திய அரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தை தேர்தல் முடியும் வரையிலாவது நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கிருஷ்ணா, கர்நாடகாவில் அடுத்த மாதம் புதிய அரசு பதவியேற்க உள்ளதாகவும், இதையடுத்து இந்த பிரச்சினை குறித்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment