சட்ட விரோத, திருட்டு மென்பொருட்கள் புழக்கத்தினால் இந்திய மென்பொருள் தயாரிப்புத் துறைக்கு இந்த ஆண்டு 2 பில்லியன் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சர்வதேச மென்பொருள் தொழிற்துறையை பிரதிநிதித்துவம் செய்யும் பிசினஸ் சாஃப்ட்வேர் அலையன்ஸ் (பி.எஸ்.ஏ) நடத்திய ஆய்வில், பொதுவாக திருட்டு மென்பொருள் புழக்கம் குறைந்திருக்கிறது என்றாலும் 2006-ம் ஆண்டில் 1.28 பில்லியன் டாலரும், 2007- ல் 2 பில்லியன் டாலரும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
பெர்சனல் கம்ப்யூட்டர்களில் திருட்டு மென்பொருள் உபயோகம் 2007-ம் ஆண்டு 69 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தப் பிரிவில் உலக அளவிலும் கூட திருட்டு மென்பொருள் புழக்கம் குறைந்துள்ளது என்று கூறுகிறது இந்த ஆய்வு.
திருட்டு மென்பொருள் புழக்கங்களால் மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் இழப்புகளை கடுமையாக சந்தித்து வருகிறது. முன்பு ஒரு முறை மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குனர் இதுகுறித்து, திருட்டு மென்பொருள் புழக்கங்களால் வருவாயில் பெரும்பகுதியை இழக்க நேரிடுகிறது என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
மென்பொருள் தயாரிப்புத் துறையின் வருவாயை மட்டும் இந்த திருட்டு மென்பொருள் புழக்கம் பாதிக்கவில்லை, வேலைவாய்ப்புகளையும் பறித்து இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்திற்கே முட்டுக்கட்டை போட்டு வருகிறது என்று இந்த துறையைச் சார்ந்தவர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர்.
4 ஆண்டு காலக் கட்டத்தில் கணினி திருட்டு மென்பொருள் புழக்கத்தை வெறும் 10 சதவீதப் புள்ளிகள் குறைத்தாலே 44,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும், பொருளாதார வளர்ச்சியில் 3.1 பில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும், வரிவருவாய் 200 மில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என்றும் ஐ.டி.சி. பொருளாதாரத் தாக்க ஆய்வு ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தற்போது இது குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பல நிறுவனங்கள் இறங்கியிருப்பதால் ஓரளவிற்கு திருட்டு மென்பொருள் புழக்கம் குறைந்திருக்கிறது என்றாலும் முற்றிலும் இதனை ஒழிப்பதற்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பதே இந்த துறையினரின் கவலையாக உள்ளது.
No comments:
Post a Comment