Search

Custom Search

Saturday, June 28, 2008

மைக்ரோசாப்ட் தலைவர் பொறுப்பு: பில்கேட்ஸ் விலகல்

பில்கேட்ஸ்
உலகின் முன்னணி மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான மைரோசாப்ட் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் இன்றுடன் விலகுகிறார்.
பல இளைஞர்களுக்கு ஊக்கமும், தொழிலதிபர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் விளங்கிய பில்கேட்ஸ், கடந்த 1975ல் உலகிறகு அறியப்படாத 20 வயது இளைஞனாக இருந்த போது துவக்கிய நிறுவனம் தான் மைக்ரோசாப்ட்.
இதில் கிடைத்த வருவாய் மூலம் கடந்த 1994ம் ஆண்டில் அமெரிக்காவின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையை பில்கேட்ஸ் அடைந்தார். அதே ஆண்டில் அவருக்கு விலைமதிப்பில்லாத மற்றொன்றும் கிடைத்தது. அது அவரது மனைவி மெலிண்டா கேட்ஸ்.
திருமணமான ஒரு ஆண்டில் உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையையும் பில்கேட்ஸ் பெற்றார். கடந்த 1995 முதல் 2007ம் ஆண்டு வரை உலகின் நம்பர்-1 பணக்காரர் என்ற பெருமையை பில்கேட்ஸ் தக்க வைத்துக் கொள்வதற்கு பெரும் உதவியாக இருந்தது மைக்ரோசாப்ட் நிறுவனமும் அதன் திறமையான ஊழியர்களும்.
இன்று (ஜூலை 27ம் தேதி) பதவி விலகப் போவதாக கடந்த 2006ம் ஆண்டு ஜூன் மாதமே பில்கேட்ஸ் விருப்பம் தெரிவித்த பில்கேட்ஸ், தனது எதிர்காலத்தை உலக சுகாதாரம் மற்றும் வளர்ச்சித் திட்டத்திற்காக (கேட்ஸ் அறக்கட்டளையின் நலத்திட்டம்) அர்ப்பணிக்க உள்ளதாக கூறினார்.
இன்று உலகளவில் பயன்படுத்தப்படும் கணினிகளில் 90 சதவீதம், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருட்கள் தான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உலகமயமாக்கல் காரணமாக மென்பொருள் வளர்ச்சித்துறையில் தற்போது பல்வேறு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், இத்துறைக்காக பில்கேட்சின் பங்களிப்பையும், அவர் ஏற்படுத்திய மென்பொருள் புரட்சியையும் உலக மக்கள் நீண்டநாள் நினைவில் வைத்திருப்பார்கள்.

ஜோக்ஸ் HAHA ஹிஹி :

கர்நாடக சங்கீதம் :

"என்னடா திடீர்னு அவன் கர்நாடக சங்கீதம் பிடிக்கும் அ‌‌ப்படிங்கிறான்?"
"அட நீ வேற, கர்நாடகாவிலிருந்து பக்கத்து வீட்டுக்கு வந்திருக்கிற சங்கீதாவைச் சொல்லியிருப்பான்!"
--------------------------------------------------------------------------------------------------

கல்யாணம் முடிஞ்சதும்

நிருபர்: உங்க கல்யாணம் முடிஞ்சதும் யார்கிட்டே முதல் ஆசி வாங்குவீங்க?
நடிகை: விவகாரத்து சமயத்துல எனக்கு எப்பவும் உறுதுணையாக இருக்கும் எங்க குடும்ப வக்கீலிடம்தான்!"
------------------------------------------------------------------------------------------------

வழுக்கை மாப்பிள்ளை

"மாப்பிள்ளைக்குத் தலையெல்லாம் வழுக்கை பரவாயில்லையா?"
"பொண்ணுக்குக் கூட வாயெல்லாம் பொக்கை தான் பரவாயில்லையா?"


வளர்ந்து வரும் மொபைல் இண்டர்நெட் துறை

கணினி மூலம் இணையதளத்திற்குள் செல்வது போல், தற்போது செல்பேசி மூலம் இணையதளத்திற்குள் செல்லும் நடவடிக்கை அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் நடைபெற்ற "கம்யூனிக் ஆசியா கருத்தரங்கில்" இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதள நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வண்ணம் தயாரிக்கப்படும் செல்பேசிகளின் விலையும் தற்போது குறைந்து வருகிறது. மாறாக கணினி விலைகள் அல்லது லேப்-டாப் விலைகள் இதனை ஒப்பு நோக்குகையில் சற்று அதிகமாகவே உள்ளது.
ஒரு மெகாபைட் தரவைப் பெற ஆகும் செலவு, மொபைல் இண்டர்நெட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது என்று அந்த கருத்தரங்கில் ஆலோசனை நிறுவனமான மெக்கின்ஸி நிறுவனத்தின் அதிகாரி ஆந்ரே லிவிஸ் கூறுகிறார்.
இணையதள இணைப்புகளுக்கு ஆகும் செலவுகளும் குறைந்துள்ளன. இதனால் மொபைல் இணையதள நடவடிக்கைகள் பெருகினால் விளம்பரத்துறை அதை நோக்கி வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே இந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசியவர்கள் பெரும்பாலும் கூறினர்.
எனவே முதல் முறையாக இணையதளம் செல்பவர்கள் செல்பேசி வழியாகவே செல்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்த கருத்தரங்கின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க நோக்கியா நிறுவனம் வர்த்தகப் பயனாளர்களுக்காக மின்னஞ்சல் பயன்பாடு கொண்ட இரண்டு செல்பேசி மாடல்களை அறிமுகம் செய்தது.
தென் கொரியாவின் சாம்சங் நிறுவனம் டச்-ஸ்க்ரீன் மாடலில் புதிய ஸ்மார்ட் ஃபோனை அறிமுகம் செய்துள்ளது.
கடந்த வாரம் ஆப்பிள் நிறுவனம் அதிகபட்ச பயன்பாடுகளுக்கான 3ஜி செல்பேசியை அறிமுகம் செய்துள்ளது. இதில் துரிதமாக இணையத்தை அணுகும் வசதிகளும், மேலும் பிற பயனாளர் சார்பான விஷயங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
ஆனால் செல்பேசியில் பொருளடக்கங்களுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் மிகப்பெரிய மீடியாக்கள் இன்னமும் இந்த செல்பேசி வாசக தளம் பற்றி கண்டு கொள்ளாமல் இருக்கிறது என்று ருபெர்ட் முர்டாக்கின் நியூஸ் கார்ப்பரேஷன் குழுமத்தைச் சேர்ந்த ஒரு ஊடக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நவீன வளர்ச்சிகளால் மொபைலில் விளம்பரம் என்ற தொலை தூரக் கனவு நினைவாகும் சாத்தியங்கள் பெருகியுள்ளதாக கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புதிய இணைய முகவரிகள் பரவலாக்கப்படுகிறது

ஆன்-லைன் அல்லது இணையதள முகவரிகள் தற்போது உள்ள .காம் உள்ளிட்ட சொற்ப பின்னொட்டுகள் அல்லாது பிற வகையிலான பின்னொட்டுகளைக் கொண்ட இணைய முகவரிகளையும் பதிவு செய்ய முடிவாகியுள்ளது.
இதுபோன்ற பல இணைய முகவர்களை எண்ணற்று பெருக்க இன்டர்நெட் கார்ப்பரேஷன் ஃபார் அசைன்டு நேம்ஸ் அன்ட் நம்பர்ஸ் (ICANN) இதற்கான அனுமதிகளை வழங்க பெரியளவில் திட்டமிட்டுள்ளது.
உதாரணமாக வர்த்தகம் மற்றும் தொழில்துறை தொடர்பான இணையதளங்கள் .ஐபிஎம் அல்லது .ஈபே போன்ற பின்னொட்டுகளை தங்கள் இணையதள முகவரியில் சேர்த்துக் கொள்ள தற்போது விண்ணப்பிக்கலாம். அதே போல் பெரு நகரங்களுக்கான இணையதளங்கள் தங்களது முகவரியில் உதாரணமாக .nyc அல்லது .berlin போன்ற பொருத்தமான பின்னொட்டுகளை சேர்த்துக் கொள்ளலாம்.
அதேபோல் பொழுதுபோக்கு தொடர்பான இணையதள முகவரிகளில் .நியூஸ், .ஸ்போர்ட்ஸ் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள அனுமதிகள் பரவலாக்கப்பட உள்ளன.
இணையதளத்திற்கான கட்டுப்பாட்டு அமைப்பான ஐகேன், இந்த மாற்றங்களினால் புதிய இணையதள முகவரிகளுக்கான நாட்டம் கடுமையாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது. இதன் மூலம் தனி நபர்களும், நிறுவனங்களும் தங்களது தனித்த இணையதள அடையாளத்தை பெறுவர் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த புதிய முன்னணி டொமைன்களுக்கான பதிவுத்தொகை சுமார் ஒரு லட்சம் டாலர்கள் முதல் 5 லட்சம் டாலர்கள் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இகேன் கூறியுள்ளது.
கடந்த 1980களில் இணையதளங்கள் துவக்கப்பட்ட போது, இப்போதைய பல தரப்பட்ட உலகளாவிய தொடர்புபடுத்துதல் துறையாக இது அசுர வளர்ச்சி காணும் என்று பலர் நினைக்கவில்லை. இதனால் .காம், .எஜு., .ஜிஓவி போன்ற பெயர்கள் போதுமானதாக இருந்தது.
ஆனால் இன்றோ சுமார் 160 மில்லியன் இணையதளங்கள் உள்ளன. இதில் 70 மில்லியன் இணையதளங்கள் .காம் என்றும் 80 மில்லியன் இணையதளங்கள் தங்கள் நாட்டுப் அடையாளம் கொண்ட பின்னொட்டுகளுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சுருக்கமாக கூறவேண்டுமென்றால் இந்த திட்டத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் ஆன்-லைன் ரியல் எஸ்டேட்டை துவங்கியுள்ளதாக ஐகேன் குறிப்பிட்டுள்ளது.
புதிய டொமைன் நேம்களுக்கான விண்ணப்பங்கள் வருவதைப் பொறுத்து, ஏப்ரல் 2009ம் ஆண்டு இந்த நடவடிக்கைகள் துவங்கும் என்றும், இந்த புதிய இணையதள முகவரிகள் அதே ஆண்டின் இறுதியில் நடைமுறைக்கு வரும் என்றும் ஐகேன் தெரிவித்துள்ளது.

Sunday, June 22, 2008

ஐ.டி. நிறுவனங்களில் பெருகி வரும் பாண்டு நடைமுறை

கம்ப்யூட்டர் கீ போர்டு
தற்போது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தனியார் பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்லூரிகளில் புதுமுக ஊழியர்களை அல்லது ட்ரெய்னீக்களை (Freshers and Trainees) தேர்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது.
இவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு ஏகப்பட்ட தொகையை முதலீடு செய்வதாகக் கூறும் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், அவர்களை நிறுவனத்தில் தக்கவைக்க ஒப்பந்த பாண்டுகளில் கையெழுத்திட வைக்கின்றன.
முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் புதிய மென்பொருள் பொறியாளர்களின் பயிற்சிக்காக சுமார் 150 மில்லியன் டாலர் தொகையை செலவிடுவதாகத் தெரிய வந்துள்ளது. எனவே அவர்கள் பயிற்சி முடிந்து வேலையை விட்டுச் செல்லாமல் இருக்க இந்த பிணையம் அவசியம் என்று கூறி வருகின்றன.
தனது கனவு வேலையான மென்பொருள் துறையில் அடியெடுத்து வைக்கும் இளம் மாணவர்கள், பல நேரங்களில் வேறு நிறுவனங்களுக்கு மாறுவதற்கு கடுமையான பிணைத் தொகையை கட்டிவிட்டு வெளியேற வேண்டியிருக்கிறது. இதனால் பலர் பெரிய அளவில் கடன் வாங்கவும் நேரிடுகிறது.
பிணைத்தொகை ரூ.50,000 முதல் ரூ.75,000 வரை கேட்கப்படுகிறது. இந்த தொகையை கொடுக்க முடியவில்லை எனில் வங்கியில் கடன் வாங்கி செலுத்துமாறு கோரப்படுகின்றனர். இது மேலும் செலவுகளை அதிகரிக்கும் விஷயமாகும். ஏனெனில் கடனுக்கு வட்டி கட்டவேண்டும். எனவே ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து முதல் சம்பள காசோலையை வாங்கும் முன்பே ஒரு மாணவ ஊழியர் கடனாளியாகி விடும் அவல நிலை ஏற்பட்டு வருகிறது.
ஒரு சிலர் பாண்ட் தொகைக்காக ரூ. 2 லட்சம் வரையில் வங்கிக் கடன் பெறுகின்றனர். இதனால் 2 ஆண்டு கால கடனுக்கு குறைந்தது ரூ.2500 வட்டி செலுத்த நேரிடுகிறது.
அதாவது 2 ஆண்டுகள் பிணை முடிந்தவுடன் வங்கி வட்டித் தொகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை கடனாளிக்கு திரும்ப செலுத்தி விடுகிறது. ஆனால் மீதித் தொகை வங்கிகளிடமே உள்ளது. பிணைக்காலத்தில் வேலையை விட்டுச்சென்றால் பிணைத்தொகை திரும்பத் தரப்படமாட்டாது. ஆனால் திறமை குறைவு காரணமாக நிறுவனமே வேலையை விட்டு அனுப்பி விட்டால் பிணைத் தொகை திரும்பக் கிடைக்கும்.
ஆனால் இதுபோன்ற தருணங்களில் வட்டித் தொகையை வங்கிகள் திரும்பத் தராது. ஆனால் ஒப்பந்த காலத்தை வெற்றிகரமாக கழித்து விட்டு நிறுவனத்தில் நீடித்தால் பிணைத் தொகை திரும்ப கொடுக்கப்பட்டு விடுகிறது.
சில நிறுவனங்கள் இவ்வளவு காலத்திற்கு பணியில் இருப்பேன் என்பதற்கு உத்தரவாதமாக ஒப்பந்தம் இடுகிறது. அந்த காலம் முடிவதற்குள் ஒருவர் வேலையைத் துறந்தால், அவர் கண்னி முன் அமர்ந்து பணியாற்றிய நேர அடிப்படையில் ஒரு தொகையை கணக்கிட்டு அவரை கட்டிவிட்டு வேலையை துறங்கள் என்கிறது.
இது அனைத்து முன்னணி நிறுவனங்களும் கடைபிடிக்கும் நடைமுறைதான் என்றாலும், அந்த காலக்கட்டத்தில் குறைந்த வருவாய், குறைந்த ஊதிய உயர்வு ஆகியவற்றை ஒருவர் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது. சில நிறுவனங்கள் பிணைத் தொகையுடன் அசல் கல்லூரி சான்றிதழ்களையும் தங்களிடம் வைத்துக் கொள்கிறது. இதனால் ஒருவர் வேறு வேலைக்கு மனு செய்யவும் முடியாத நிலை ஏற்படுகிறது.
பிணைத் தொகையை செலுத்தாமல் வீம்புக்கு வேலையை துறந்தால் சட்ட நடவடிக்கைகளை ஒருவர் எதிர்கொள்ள வேண்டி வரும்.
பிணை ஒப்பந்தங்கள் தகவல் தொழில் நுட்பத் துறை நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் இழப்புகளுக்கு சட்டத்தை அணுக முடியாத துர்பாக்கிய நிலையே உள்ளது.

அபாரமான விஷுவல் டிக்‌ஷனரி இணையதளம்

நாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரிய வராது. ஆனால் மெரியம் வெப்ஸ்டர் அகராதி, சமீபத்தில் அபாரமான விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது.
அதாவது பேன்யன் ட்ரீ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அதற்கான பொருளோ அல்லது விளக்கமோ இருக்குமே தவிர அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் புதிய விஷுவல் இணையதளத்தில் ஆலமரம் படம் வரும். அது மட்டுமல்லாது மரத்தின் பாகங்களை விளக்கும் படமும் கிடைக்கும்.
ஆரம்பக் கல்வி படித்து வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளவே இந்த ஆன்லைன் டிக்‌ஷனரி பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இதுபோன்று வாழ்வில் நாம் காணும் ஒரு 6000 பொருட்களுக்கான படங்கள் இந்த ஆன் லைன் அகராதியில் உள்ளன.
20,000 வார்த்தைகளுக்கு அது பயன்படுத்தப்படும் கான்டெக்ஸ்சுவல் அர்த்தங்களை, அருஞ்சொல் நிபுணர்களைக் கொண்டு த்யாரித்துள்ளது.
இணையதளத்தின் சைடு பாரில் வானியல், புவி, தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை, விலங்குகள், மனிதன், உணவு மற்றும் சமையலறை, வீடு, உடை மற்றும் பொருட்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், போக்குவரத்து மற்றும் எந்திரம், எனர்ஜி, விஞ்ஞானம், சமூகம், விளையாட்டு என்று 15 துறைகளாக பிரித்து அந்தந்த துறையைச் சேர்ந்த வார்த்தைகளுக்கான படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்கிறது இந்த ஆன் லைன் அகராதி.
பான்கிரியாஸ் என்றால் கணையம் என்று நமக்கு தெரியும், லிவர் தெரியும், பெருங்குடல், சிறுகுடல் போன்ற வார்த்தைகளெல்லாம் நமக்கு தெரியும் ஆனால் அது எப்படி இருக்கும்? விளக்கத்துடன் தெரிந்து கொள்ளவேண்டுமா உடனே செல்லுங்கள் விஷுவல்.மெரியம்வெப்ஸ்டர்.காம். இணையதளத்திற்கு.
1996-ம் ஆண்டு தி விஷுவல் டிக்‌ஷனரி என்ற புதிய அகராதி சி.டி. ரோம்களில் வந்தது. இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் வெளியானது. அப்போது முதல் பல்வேறு விதத்தில் மேம்பட்ட சி.டி. ரோம் டிக்‌ஷனரிகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் ஆன்லைனில் அனைவரும் எளிதில் காணும் வண்ணம் இதனை கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளது மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம்.

Sunday, June 15, 2008

தசாவதாரம்:

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தடைகளை கடந்து ஒருவழியாக 'தசாவதாரம்' வெளியாகிவிட்டது. 12-ம் நூற்றாண்டில் தொடங்கி 21-ம் நூற்றாண்டில் படம் முடிகிறது.
இந்த காற்றாற்று வெள்ளத்தில், உணர்ச்சிகரமான கதையையோ அல்லது ஊடுருவித் துளைக்கும் காட்சியையோ எதிர்பார்த்தால் ஏமாற்றமே.
சைவ- வைணவ சண்டையுடன் தொடங்குகிறது 'தசாவதாரம்'. சண்டை என்று வந்த பின் செக்கேது? சிலையேது?
சிவனை வணங்க மறுக்கும் ராமானுஜ நம்பியை கோவிந்தராஜ பெருமாள் சிலையுடன் கட்டி, கடலில் வீசுகிறான் சைவத்தைச் சேர்ந்த குலோத்துங்கச் சோழன். சோழனால் சமுத்திரத்தில் மூழ்கிய கதை, மீண்டெழுவது 11ம் நூற்றாண்டில்.
அமெரிக்காவில் விஞ்ஞானியாக இருக்கும் கோவிந்தன், வைரஸ் ஒன்றை கண்டுபிடிக்கிறான். பரவினால் தரணியே நாசமாகும் இந்த வைரசை, உயரதிகாரி ஒருவர் தீவிரவாதிகளுக்கு விலை பேசுகிறார். இதை தடுக்க, வைரசை கோவிந்தன் கடத்துகிறார்.
முன்னாள் ஏஜென்டான வெள்ளை அமெரிக்கன் பிளட்சர் தான் வில்லன். கோவிந்தன் ஓட, வில்லன் துரத்த...மீதி ரீல் முழுவதும் ஜாலியோ..ஜிம்கானா.
கோவிந்தனின் ஓட்டம் அமெரிக்காவில் தொடங்கி, சென்னை சுனாமி பேரலைகளுடன் முடிகிறது.
இந்த நெடும் பயணத்தில் சோழர் கால வைணவ இளைஞன், அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், மனநிலை பாதித்த பாட்டி, ஜப்பானிய கராத்தே மாஸ்டர், பஞ்சாபி பாடகர், நியாயம் கோரும் தலித் இளைஞன், அமெரிக்க கொலை வெறியன், அப்பாவி முஸ்லிம் இளைஞன், விஞ்ஞானி, தெலுங்குகார உளவுத்துறை அதிகாரி... என பல வேஷம் காட்டுகிறார் கமல். ஆனால் இதில் சில மனதை கவரவில்லை.
'தசாவதாரம்' கமல்
சுந்தரத் தெலுங்கு பேசும் பல்ராம் நாயுடு நகைச்சுவை சரவெடி. பிளெட்சர் (கமல்) வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு, இலக்கைத் தவிர எதையும் மதிக்காத முரட்டுத் தனம்.
கிருஷ்ணவேணி பாட்டி வேடத்தில் மேக்கப் சற்று தூக்கல். பாட்டி உட்பட சில கேரக்டர்களில் கமலின் பேச்சை புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறது.
நம்பியாக வரும் கமலின் நடிப்பும், தேவிஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசையும் சோழர் கால அரங்க அமைப்புகளும் புல்லரிக்க வைக்கின்றன.
நம்பியின் மனைவி, சிதம்பரம் ஆண்டாள் என அசினுக்கு இரட்டை வேடம். வில்லனுக்கு உதவி புரிந்து அநியாயமாக உயிர்விடும் மல்லிகா ஷெராவத், மணக்காத மல்லிகை. பி. வாசு, சந்தான பாரதி, நாகேஷ், ஜெயப்ரதா, கே.ஆர். விஜய, வையாபுரி ஆகியோரும் படத்தில் உள்ளனர்.
ஒளிப்பதிவாளர் ரவி வர்மன், பாடல்களுக்கு இசையமைத்த ஹிமேஷ் ரேஷ்மையா, பின்னணி இசையமைத்த தேவிஸ்ரீ பிரசாத், எடிட்டர் தணிகாசலம் ஆகியோருக்கு தனித்தனியே பாராட்டு விழா நடத்தலாம்.
படத்தின் நிஜ பலம் தொழிநுட்பம். கிராபிக்ஸில் தூசி முதல் சுனாமி வரை காட்டி, அசத்தியிருக்கிறார்கள். வசனத்தில் காரமும் உண்டு; காமெடியும் உண்டு. படம் நெடுக வரும் வரலாற்று விழிப்புணர்வு, பிற தமிழ் படங்களில் பார்க்க முடியாதது.
இரண்டு, மூன்று கமல்கள் வரும் காட்சிகள் நிறைய உண்டு. அதை சின்ன உறுத்தல் கூட இல்லாமல் படமாக்கியிருப்பதில் கே.எஸ். ரவிக்குமாரின் உழைப்பு பளிச்சிடுகிறது.
இவ்வளவு இருந்தும் அழுத்தமான கதை இருந்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றுவது, இதன் ஒரே பலவீனம்.
எனினும் கமல் + கே.எஸ். ரவிக்குமார் கூட்டணியினரின் இப்படம், ஒரு மெகா கார்னிவால். அதில் கரைய முடிந்தவர்களுக்கு கொண்டாட்டம் கியாரண்டி.


Saturday, June 7, 2008

தைவானில் பிரம்மாண்ட கணினிக் கண்காட்சி

கணினிக் கண்காட்சி
'கம்ப்யூடெக்ஸ் தைபே' என்ற உலகின் 2-வது மிகப்பெரிய கணினிக் கண்காட்சி தைவானில் செவ்வாயன்று துவங்கியது. அதாவது இதில் சுமார் 35,000 வெளிநாட்டினர் கணினிகளை வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைபேயில் உள்ள உலக வர்த்தக மையத்தின் 3 பிரம்மாண்ட ஹால்களில் விதவிதமான கணினிகள் குவிக்கப்பட்டுள்ளன. 22 நாடுகளிலிருந்து 70 நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் கொண்டு வந்துள்ளனர்.
இதன்மூலம் 2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டமுடியும் என்றும், சுற்றுலாத்துறை வருவாய் மட்டும் 1 பில்லியன் டாலர் அளவுக்குக் கிடைக்கும் என்றும் தைவான் அரசு கணித்துள்ளது.
ஜெர்மனியின் செபிட் என்ற பிரம்மாண்ட கண்காட்சிக்கு பிறகு கம்ப்யூடெக்ஸ் தைபே தான் 2-வது மிகப்பெரிய கணினிக் கண்காட்சியாகும். பல்வேறு விதமான கணினிகளை காட்சிப்படுத்துவது மட்டும் இதன் நோக்கமல்ல.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறான பலதொழில் நுட்ப பொருட்களும் இந்த கண்காட்சியில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இதில் "க்ரீன் ஐ.டி." என்பது புதுமையான அம்சம் என்று கூறப்படுகிறது. இதில் கைக்கு அடக்கமான குறைந்த விலை மடிக்கணினிகள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் முதலிடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 500 அமெரிக்க டாலருக்கும் குறைந்த விலையில், மடிக் கணினிகள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தைவானின் ஆசுஸ் டெக் கணினித் தயாரிப்பு நிறுவனம் தனது குறைந்த விலை மடிக்கணினியான ஈபிசி-யையும் கண்காட்சியில் குவித்துள்ளது. இது குழந்தைகளைக் கவருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 0.89 கிலோ கிராம்தான். விலை 300 டாலர்கள் முதல் அதிகபட்சம் 500 டாலர்கள் வரை.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சப் பிரைம் நிதி நெருக்கடி காரணமாகவும், டாலர் மதிப்பு சரிவு காரணமாகவும் அமெரிக்க கொள்முதல் இம்முறை குறைவாக இருக்கும் என்றும், ஆனால் இந்த குறையை ஆசிய நாடுகள் ஈடுகட்டி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. கடைசி நாளில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கும் தனி நபர் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

Friday, June 6, 2008

'ஹாங்காங், சீன இணையங்கள் ஆபத்தானவை'

இணையதளங்களை பயன்படுத்தும் போது வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க Anti-virus மென்பொருட்கள் பல இருந்தாலும், அவற்றை அனைவரும் பயன்படுத்துவது இல்லை.
வைரஸ் ஒழிப்பு மென்பொருட்களைப் பயன்படுத்தும் பலரும் அதனை அவ்வப்போது மேம்படுத்தாமல் பழைய பதிப்பையே உபயோகித்து வருவதால், வைரஸ் தாக்குதல்கள் அடிக்கடி ஏற்படத்தான் செய்கிறது.
இது இப்படி இருக்க, அதிக ஆபத்தான இணையதளங்கள் எவை என்று மெக்கஃபீ (McAfee) நிறுவனம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. இதில் ஹாங்காங், சீனா ஆகிய நாடுகளை சேர்ந்த இணையங்கள் முன்னணியில் உள்ளன.
.hk (ஹாங்காங்) மற்றும் .cn (சீனா) என்ற டொமைன் பெயருடைய இணையதளங்கள் முறையே 19.2 மற்றும் 11.8 சதவீதம் ஆபத்தானவை என மெக்கஃபீ கண்டறிந்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக .info எனப்படும் தகவல் இணையதளங்களில் 11.7 சதவீதம் ஆபத்தானவை எனத் தெரியவந்துள்ளது.
இதில் சீனா மற்றும் ஹாங்காங் இணையங்களை பயன்படுத்துபவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆனால் .info எனப்படும் தகவல் இணையதளங்களுக்கு மொழி ஒரு தடையாக இல்லாததால், இதனை பலரும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஏராளமான இணைய பார்வையாளர்கள் பாதிக்கப்படுவதாக இத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
உலகளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ள .com இணையதளங்களில் 5 சதவீதம் மட்டுமே ஆபத்தானவை என்பது ஆறுதலான விஷயம்.

Monday, June 2, 2008

சிறார்களைக் குஷிப்படுத்தும் `நார்னியா ரிட்டன்ஸ்'

'நார்நியா ரிட்டன்ஸ்'
அமெரிக்காவில் குழந்தைகளுக்காக வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்ட எஸ்.சி.லுயிஸ் எழுதிய தி குரோனிக்கல்ஸ் ஆப் நார்நியா நாவலின் 2ம் பாகம், `நார்நியா ரிட்டன்ஸ்' என்ற பெயரில் திரைப்படமாக வந்துள்ளது.
நார்நியா நாட்டின் ராஜாவைக் கொலைசெய்து விட்டு ஆட்சியைப் பிடிக்கிறார் அவரது தம்பி மிராஸ். அவருக்கு டெர்மைன் வீரர்கள் உதவுகின்றனர்.
அவரை எதிர்த்து இளவரசர் காஸ்பியன் போராடுவதே கதை. பீட்டர் தலைமையில் இங்கிலாந்தில் இருந்து வரும் எட்மண்ட், சூசன், லுசி ஆகியோர் இளவரசருக்கு உதவுகின்றனர்.
பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு மிராஸின் கோட்டைக்குள் நார்நியர்கள் நுழைந்து தாக்குகின்றனர். இருப்பினும் ஒரு கட்டத்தில் டெர்மைன்களின் கை ஓங்குகிறது. அங்கிருந்து பாதி நார்நியர்களே தப்ப முடிகிறது. மற்றவர்கள் கொல்லப்படுகின்றனர். இதையடுத்து நார்நியர்களின் கோட்டையை மிராஸ் படைகள் தாக்க வருகின்றன.
சண்டையில் அப்பாவி மக்கள் மடிவதற்குப் பதில் நாம் இருவரும் மோதுவோம். யார் ஜெயிக்கிறார்களோ அந்த படைகள் வெற்றி பெற்றதாக அறிவிப்போம் என்று மிராஸிடம் கூறுகிறார் பீட்டர். இந்த சவாலை மிராஸ் ஏற்க, இருவருக்கும் கடும் வாள் சண்டை நடக்கிறது.
முடிவில் மிராஸை பீட்டர் வீழ்த்துகிறான். மிராஸை கொல்லும் வேலையை இளவரசன் காஸ்பியனிடம் பீட்டர் கொடுக்கிறான். மிராஸிற்கு காஸ்பியன் உயிர் பிச்சை அளிக்கிறான். ஆனால் மிராஸின் தளபதியே மிராஸை கொலை செய்துவிட்டு, நார்நியர்களை தாக்குமாறு டெர்மைன்களுக்கு உத்தரவிடுகிறான். இரு தரப்பிற்கும் கடும் சண்டை நடக்கிறது.
இடைப்பட்ட நேரத்தில் காட்டுக்குள் செல்லும் லுசி, "அஸ்லான்' என்ற சக்திவாய்ந்த சிங்கத்தை அழைத்து வருகிறாள். சிங்கம் ஆணையிட்டதும் காட்டில் உள்ள மரங்கள் எல்லாம் உயிர் பெற்று வந்து, டெர்மைன்களை துவம்சம் செய்கின்றன.
அங்கிருந்து டெர்மைன்கள் தப்பித்து, அருகில் உள்ள ஆற்றுக்கு செல்கின்றனர். அங்கு வரும் அஸ்லான், ஆறுகளுக்கான கடவுளை அழைத்து, பிரளயத்தை ஏற்படுத்தி, பெரும்பாலான டெர்மைன்களை அழிக்கிறது. முடிவில் காஸ்பியனிடம் நார்நியாவை ஒப்படைத்து விட்டு, 4 இளைஞர்களும் ஊர் திரும்புகின்றனர்.

கொஞ்சம் கதையை சுருக்கியிருந்தால் இன்னமும் சுவாரஸ்யமாக இருந்திருக்கும்.
படத்தில் வரும் குதிரை மனிதர்கள், பேசும் சிங்கம் போன்றவை குழந்தைகளை குஷிப்படுத்தக் கூடியவை. படத்தில் காமெடியனே ஒரு பேசும் சுண்டெலி தான். நடக்கும் மரங்கள், கொந்தளிக்கும் ஆறு, மலை உச்சியில் இருக்கும் கோட்டை போன்றவை கிராபிக்சின் கைவண்ணங்கள்.
ஆண்ட்ரூ இயக்கி உள்ள படத்தில், பீட்டராக வில்லியம் மூஸ்லே, சூசனாக அன்னா பாப்பிள்வெல், எட்மண்டாக ஸ்காண்டர் கெய்ன்ஸ், லுசியாக ஜார்ஜி ஹென்லே, காஸ்பியனாக பென் பார்ன்ஸ், அரசர் மிராஸாக செர்ஜியோ ஆகியோர் நடித்துள்ளனர்.
கோடை விடுமுறை முடியும் தருவாயில், நார்னியா ரிட்டர்ன்ஸ் படம், சிறுவர் - சிறுமிகளை குஷிப்படுத்துவதாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ரூபாய் வீழ்ச்சியால் உயரும் கணினி விலைகள்

எடை குறைவான மடிக்கணினியை நீங்கள் வாங்க நினைத்திருக்கலாம். ஆனால் பல காரணங்களினால் நீங்கள் வாங்குவதை ஒத்திபோட்டிருக்கலாம். ஆனால் ஒத்தி போட்டதற்காக நீங்கள் வருந்த நேரிடலாம். டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையத் துவங்கியிருப்பதால் லேப்-டாப் உள்ளிட்ட கணினிகளின் விலை உயர்ந்து வருகின்றன.
கணினி விற்பனையாளர்கள் விலைகளை ஏற்கனவே கடந்த வாரத்தில் 7 முதல் 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். லேப்டாப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹெச்.பி., ஹெச்.சி.எல்., ஸெனித் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தி விட்டன. இதனைத் தொடர்ந்து லெனோவோ, டெல் ஆகிய நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் ரூபாய் மதிப்பு சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளது. டாலர் ஒன்றிற்கு ரூ. 40 ஆக இருந்தது, தற்போது 42.80 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஹெச்.பி. நிறுவனம் சுமார் 13 சதவீதம் வரை விலை அதிகரிப்பு செய்துள்ளது.
டாலர் மதிப்பு உயர்வு மற்றும் சில உதிரி பாகங்களின் விலை உயர்வும் கணினி விலை உயர்விற்கு காரணம் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
தற்போது அதி பயன்பாட்டுக் கணினிகளுக்கு மட்டும் உயர்ந்த விலைகள் இன்னும் சில நாட்களில் லேப்டாப்களுக்கும் தொற்றும் என்று தெரிகிறது.
ஹெச்.சி.எல். நிறுவனம் தங்களது அனைத்து தயாரிப்பிற்கும் 5 முதல் 7 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் உதிரிபாகங்கள் விலை உயருகிறது. இதனால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அசெம்ப்ளிங் யூனிட் வைத்துள்ளன. ஏனெனில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வது மலிவாகும்.
ஸெனித் நிறுவனமும் கணினிகள் விலையை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.
ஆனால் இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும், விரைவில் விலைகள் இறங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ரூபாய் மதிப்பு உயரும்போது விலைகள் குறையும் என்று தெரிகிறது.

செல்போன் மிஸ்ஸிங்கா? கவலை வேண்டாம்

செல்போன் என்பது தற்போது ஒரு மினி கணினியாகவே செயல்படத் துவங்கியுள்ளது. அதில் புகைப்படங்கள், வீடியோக்கள் முதல் கோப்புகள் வரை அனைத்து விதமான தரவுகளையும் நாம் சேமித்து வைத்திருக்கிறோம்.
அப்பேர்ப்பட்ட செல்பேசி தொலைந்து போய் விட்டால் அத்தனைத் தரவுகளும், முக்கிய முகவரிகள், மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள் உள்ளிட்ட அனைத்தையும் வாடிக்கையாளர்கள் தற்போது திரும்பப் பெற்று விட முடியும்.
பார்தி ஏர்டெல் நிறுவனம் ஆன் மொபைல் குளோபல் என்ற நிறுவனத்துடன் இதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அதாவது தொலைந்த தரவுகளை மீட்டெடுக்கும் சேவைகளுக்காக இந்த ஒப்பந்தத்தை தன் வாடிக்கையாளர்களுக்காக பார்தி ஏர்டெல் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
முதலில் இந்த சேவைகள் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இந்த வசதி ஜாவா உள்ள உயர் தொழில்நுட்ப செல்பேசி சாதனங்களில் மட்டுமே சாத்தியம்.
அதாவது வாடிக்கையாளர்கள் பேக்-அப் தேவையான தரவுகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இதுபிறகு ஜிபிஆர்எஸ் வழி சர்வரை அடையும் அதன் பிறகு ஒரு டிஜிட்டல் அறையில் சேமிக்கப்படும். இதனை வாடிக்கையாளர்கள் மட்டுமே அணுக முடியும்.
இது பாதுகாபானதே. ஏனெனில் பயனர் அடையாளம் மற்றும் பாஸ்வேர்டு இருந்தால் மட்டுமே இந்த தகவலை அணுக முடியும். ஒவ்வொருவரும் இந்த சேவையை தங்கள் செல்பேசியிலேயே ஏற்படுத்தி கொள்ளலாம். எஸ்.எம்.எஸ். மூலமாகவோ அல்லது செல்பேசி இணைப்புச் சேவை வழங்கும் நிறுவனத்தின் இணையதளம் மூல்மாகவோ கோரிக்கை அனுப்பி இந்த சேவையை செல்பேசியில் உருவாக்கிக் கொள்ளலாம்.
சிம் கார்டிலிருந்து தரவுகளைப் பெறும் மென்பொருளைக் காட்டிலும் இந்த மென்பொருள் அதிக பயனுள்ளது. அதாவது இதில் அழிக்கப்பட்ட தரவுகளை கூட வாடிக்கையாளர்கள் செல்பேசி தொலையும் பட்சத்தில் திரும்பப் பெறலாம். தங்கள் தொலைந்த செல்பேசியில் சேமித்து வைத்திருந்த அனைத்து தகவல்கள், அழித்த தகவல்கள் என்று அனைத்தையும் செல்பேசி தொலைந்தாலும் ஒரு நெட்வொர்க் வசதி மூலம் மீண்டும் டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் ஒரு செல்பேசி சாதனத்திலிருந்து வேறு செல்பேசி சாதனத்திற்கு மாறினால் கூட தகவல்களை எந்தவித சிரமமும், தடையும் இன்றி புதிய செல்பேசிகளில் ஏற்றிக் கொள்ளலாம்.
இந்த தரவு மீட்பு பயன்பாட்டுச் சேவையை பயன்படுத்தும் 3வது நிறுவனம் பார்தி ஏர்டெல் ஆகும். மலேசியாவின் மேக்சிஸ், இந்தோனேஷியாவின் இந்தோஸாட் ஆகிய 2 நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

'டாடா ஸ்கை' மாத வாடகை குறைப்பு

'டிடிஎச்' எனப்படும் வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி சேவை வழங்கும் நிறுவனமான டாடா ஸ்கை தனது மாத கட்டணத்தை அதிரடியாக குறைத்துள்ளது. இதன் மூலம் அந்நிறுவன வாடிக்கையாளர் எண்ணிக்கை விரைவில் 3 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய போது டாடா ஸ்கை நிறுவனத்தின் வர்த்தக இயக்குனர் விக்ரம் மெஹ்ரா இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, இதுவரை ஃபேமிலி பேக் (Family Pack) பிரிவுக்கு வசூலிக்கப்பட்ட ரூ.250 கட்டணம் தற்போது ரூ.200 ஆகவும், சூப்பர் சேவர் பேக் (Super Saver pack) பிரிவுக்கான கட்டணம் ரூ.300ல் இருந்து ரூ.260 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
ஃபேமிலி பேக் பிரிவில் ஹிந்தி, பிராந்திய மொழி, கார்டூன் மற்றும் செய்தி என மொத்தம் 90 சேனல்கள் இடம்பெற்றுள்ளது. இதேபோல் சூப்பர் சேவர் பேக் பிரிவில் ஆங்கில மொழி திரைப்பட சேனல்கள் உட்பட 110 சேனல்களுக்கான தொலைக்காட்சி சேவை வழங்கப்படுகிறது.
இந்த விலை குறைப்பு நடவடிக்கையின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ள மெஹ்ரா, விரைவில் 3 மில்லியன் வாடிக்கையாளர்கள் என்ற இலக்கை டாடா ஸ்கை எட்டும் எனக் கூறியுள்ளார்.