Search

Custom Search

Saturday, June 7, 2008

தைவானில் பிரம்மாண்ட கணினிக் கண்காட்சி

கணினிக் கண்காட்சி
'கம்ப்யூடெக்ஸ் தைபே' என்ற உலகின் 2-வது மிகப்பெரிய கணினிக் கண்காட்சி தைவானில் செவ்வாயன்று துவங்கியது. அதாவது இதில் சுமார் 35,000 வெளிநாட்டினர் கணினிகளை வாங்க வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தைபேயில் உள்ள உலக வர்த்தக மையத்தின் 3 பிரம்மாண்ட ஹால்களில் விதவிதமான கணினிகள் குவிக்கப்பட்டுள்ளன. 22 நாடுகளிலிருந்து 70 நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை இந்த கண்காட்சியில் கொண்டு வந்துள்ளனர்.
இதன்மூலம் 2 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டமுடியும் என்றும், சுற்றுலாத்துறை வருவாய் மட்டும் 1 பில்லியன் டாலர் அளவுக்குக் கிடைக்கும் என்றும் தைவான் அரசு கணித்துள்ளது.
ஜெர்மனியின் செபிட் என்ற பிரம்மாண்ட கண்காட்சிக்கு பிறகு கம்ப்யூடெக்ஸ் தைபே தான் 2-வது மிகப்பெரிய கணினிக் கண்காட்சியாகும். பல்வேறு விதமான கணினிகளை காட்சிப்படுத்துவது மட்டும் இதன் நோக்கமல்ல.
சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறான பலதொழில் நுட்ப பொருட்களும் இந்த கண்காட்சியில் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இதில் "க்ரீன் ஐ.டி." என்பது புதுமையான அம்சம் என்று கூறப்படுகிறது. இதில் கைக்கு அடக்கமான குறைந்த விலை மடிக்கணினிகள் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் முதலிடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது 500 அமெரிக்க டாலருக்கும் குறைந்த விலையில், மடிக் கணினிகள் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
தைவானின் ஆசுஸ் டெக் கணினித் தயாரிப்பு நிறுவனம் தனது குறைந்த விலை மடிக்கணினியான ஈபிசி-யையும் கண்காட்சியில் குவித்துள்ளது. இது குழந்தைகளைக் கவருமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் எடை 0.89 கிலோ கிராம்தான். விலை 300 டாலர்கள் முதல் அதிகபட்சம் 500 டாலர்கள் வரை.
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள சப் பிரைம் நிதி நெருக்கடி காரணமாகவும், டாலர் மதிப்பு சரிவு காரணமாகவும் அமெரிக்க கொள்முதல் இம்முறை குறைவாக இருக்கும் என்றும், ஆனால் இந்த குறையை ஆசிய நாடுகள் ஈடுகட்டி விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சி சனிக்கிழமை வரை நடைபெறுகிறது. கடைசி நாளில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக வாங்கும் தனி நபர் வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று கண்காட்சி அமைப்பாளர்கள் கூறுகின்றனர்.

No comments: