Search

Custom Search

Monday, June 2, 2008

ரூபாய் வீழ்ச்சியால் உயரும் கணினி விலைகள்

எடை குறைவான மடிக்கணினியை நீங்கள் வாங்க நினைத்திருக்கலாம். ஆனால் பல காரணங்களினால் நீங்கள் வாங்குவதை ஒத்திபோட்டிருக்கலாம். ஆனால் ஒத்தி போட்டதற்காக நீங்கள் வருந்த நேரிடலாம். டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையத் துவங்கியிருப்பதால் லேப்-டாப் உள்ளிட்ட கணினிகளின் விலை உயர்ந்து வருகின்றன.
கணினி விற்பனையாளர்கள் விலைகளை ஏற்கனவே கடந்த வாரத்தில் 7 முதல் 13 சதவீதம் வரை அதிகரித்துள்ளனர். லேப்டாப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹெச்.பி., ஹெச்.சி.எல்., ஸெனித் ஆகிய நிறுவனங்கள் ஏற்கனவே விலையை உயர்த்தி விட்டன. இதனைத் தொடர்ந்து லெனோவோ, டெல் ஆகிய நிறுவனங்களும் விலையை அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 3 மாதங்களில் ரூபாய் மதிப்பு சுமார் 10 சதவீதம் சரிந்துள்ளது. டாலர் ஒன்றிற்கு ரூ. 40 ஆக இருந்தது, தற்போது 42.80 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது. ஹெச்.பி. நிறுவனம் சுமார் 13 சதவீதம் வரை விலை அதிகரிப்பு செய்துள்ளது.
டாலர் மதிப்பு உயர்வு மற்றும் சில உதிரி பாகங்களின் விலை உயர்வும் கணினி விலை உயர்விற்கு காரணம் என்று நிபுணர்கள் சிலர் கூறுகின்றனர்.
தற்போது அதி பயன்பாட்டுக் கணினிகளுக்கு மட்டும் உயர்ந்த விலைகள் இன்னும் சில நாட்களில் லேப்டாப்களுக்கும் தொற்றும் என்று தெரிகிறது.
ஹெச்.சி.எல். நிறுவனம் தங்களது அனைத்து தயாரிப்பிற்கும் 5 முதல் 7 சதவீதம் வரை விலையை உயர்த்தியுள்ளது. ரூபாய் மதிப்பு சரிவால் உதிரிபாகங்கள் விலை உயருகிறது. இதனால் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் முன்னணி லேப்டாப் தயாரிப்பு நிறுவனங்கள் அனைத்தும் இந்தியாவில் அசெம்ப்ளிங் யூனிட் வைத்துள்ளன. ஏனெனில் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வது மலிவாகும்.
ஸெனித் நிறுவனமும் கணினிகள் விலையை 7 சதவீதம் உயர்த்தியுள்ளது.
ஆனால் இந்த விலை உயர்வு தற்காலிகமானது என்றும், விரைவில் விலைகள் இறங்கும் வாய்ப்பு உள்ளதாகவும் இத்துறையைச் சார்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மீண்டும் ரூபாய் மதிப்பு உயரும்போது விலைகள் குறையும் என்று தெரிகிறது.

No comments: