
உலகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த பீஜிங் ஒலிம்பிக் போட்டி, பறவைக் கூடு (Birds Nest) மைதானத்தில் நாளை (வெள்ளி) கோலாகல துவக்க விழாவுடன் துவங்குகிறது. துவக்க விழாவில் பங்கேற்க பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் பீஜிங்கிற்கு வருகை தந்துள்ளதால் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அந்நாட்டு நேரப்படி நாளை மாலை 5.45 மணியளவில் துவங்கும் முதல்கட்ட துவக்க விழா ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடக்கிறது. இதில் அந்நாட்டு தேசிய மற்றும் உள்ளூர் அளவில் 28 கலாசார நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. இந்தக் கலைநிகழ்ச்சிகளில் 15,000 கலைஞர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதைத் தொடர்ந்து 7 மணியளவில் பார்வையாளர்கள் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டு, 7.56 மணியளவில் ஒலிம்பிக் போட்டிக்கான இறுதி கவுண்ட்-டவுன் துவங்குகிறது. சரியாக 8 மணிக்கு துவங்கும் ஒலிம்பிக் முக்கிய துவக்க விழா நள்ளிரவு 11.30 மணி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் 5.45 மணியளவில் துவங்கும் முதற்கட்ட துவக்க விழாவில் ஒலிம்பிக் வளையங்கள் அணிவகுப்பு, போட்டியில் பங்கேற்கும் பல்வேறு சர்வதேச நாடுகளின் தேசியக் கொடி அணிவகுப்பு மற்றும் தேசிய கீதம் பாடுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் 14 நிமிடங்கள் நடைபெறும். இதைத் தொடர்ந்து 2 கட்டங்களாக வண்ணமிகு கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும்.
துவக்க விழாவின் இறுதி 2 மணி நேரத்தில் வீரர்களின் அணிவகுப்புக்கு இடையே கண்ணைக் கவரும் ஒளியுடன் கூடிய வாண வேடிக்கை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகமே உற்று நோக்கும் நிகழ்ச்சி என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை சீனா பன்மடங்கு அதிகரித்துள்ளது. ஒலிம்பிக் துவக்க விழா துவங்கும் போது மூடப்படும் பீஜிங் சர்வதேச விமான நிலையம், விழா முடிந்த பிறகே மீண்டும் திறக்கப்படும் என்பது சீனப் பாதுகாப்பின் ஒரு ஏற்பாடு.
No comments:
Post a Comment