Search

Custom Search

Thursday, October 30, 2008

ஹீலியம் 3 – ஒளிமயமான எதிர்காலத்திற்கு!

இந்தியாவின்
விண்வெளி ஆய்வு அமைப்பான இஸ்ரோ அனுப்பியுள்ள சந்திரயான்-1 விண்கலத்தின்
முக்கிய இலக்கு நிலவில் உள்ள ஹீலியம் 3 எனும் அணுப் பொருள் இருப்பை ஆய்வு
செய்வதே என்று கூறியிருந்தோம்.


உலகம்
முழுவதும் அணு மின் சக்தி உற்பத்திக்கு அடிப்படையாக இருந்துவரும் அணு
எரிபொருளான யுரேனியத்தில் உள்ள சிக்கல், அதனை அணு உலைகளில்
பயன்படுத்தியதற்குப் பிறகு கிடைக்கும் கழிவில் உள்ள கதிர் வீச்சு
அபாயமாகும். முதல் தலைமுறை அணு உலைகள் என்றழைக்கப்படும் கடின நீர்
உலைகளில் பயன்படுத்தப்பட்ட பிறகு கிடைக்கும் யுரேனிய அணுக் கழிவில்
இருந்துதான் அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான புளூடோனியம் கிடைக்கிறது.
அதனால்தான் யுரேனியம் அளிக்க முன்வரும் நாடுகள் அதனை மறு சுழற்சி செய்து
தொழி்ல் நுட்ப ரீதியாக அடுத்தத் தலைமுறை அணு உலையான வேக ஈனுலையில் (
Fast Breeder Reactor) பயன்படுத்திக்கொள்ள இந்தியாவிற்கு அனுமதி வழங்கக்கூடத் தயங்குகின்றன.

ஒருமுறை
பயன்படுத்தப்பட்ட யுரேனிய அணுக் கழிவை வேரொரு இடத்திற்கு கொண்டு செல்லவதோ
அல்லது மிக பாதுகாப்பாக அதனை கையாள்வதோ கூட ஆபத்து நிறைந்ததே. இது ஒரு
பெரும் பிரச்சனையாகவே உள்ளது. ஆனால், இந்தியா பயன்படுத்தப்பட்ட
யுரேனியத்தை மறு சுழற்சி செய்து அதனை வேக ஈனுலையில் பயன்படுத்தவும்,
அதன்மூலம் அணு கதிர் வீச்சு அபாயத்தை
‘0’ அளவி்ற்கு குறைத்தும் சாதனை புரிந்துள்ளது.

ஆயினும்
பாதுகாப்பான அணு சக்தி என்று இப்புவியில் ஏதுமில்லை என்ற நிலையில்தான்,
நிலவில் ஏராளமாகவுள்ள ஹீலியம் 3 அறிவியலாளர்களின் கருத்தைக் கவர்ந்தது.

நமது
புவியில் மிக மிகக் குறைவாகவே கிடைக்கும் (இல்மனைட் என்ற கனிமத்துடன்
கலந்துள்ளது) ஹீலியம் 3, நிலவில் ஏராளமாகக் கிடைக்கிறது. சூரியனில்
இருந்து வீசும் புயல்களில் பிரபஞ்சத்திற்கு கொண்டுவரப்படும் ஹீலியம்,
அப்புயல்கள் நிலவுப் பரப்பைத் தாக்கும்போது அதன் மண்ணோடு மண்ணாகக்
கலந்துவிடுகிறது. இப்படிப்பட்ட நிகழ்வு புவியில் ஏற்படாமல் புவியின் மீது
கவிந்துள்ள வளிமண்டலம் காத்துவிடுகிறது. அதனால்தான் புவியில் இது பெரிய
அளவிற்கு கிடைக்கவில்லை.


நிலவின் மேற்பரப்பில் (Regolith) உள்ள
பாறைகள், மண்ணில் கலந்துள்ள ஒரு மில்லியன் டன் ஹீலியத்தைக் கொண்டு
புவியின் எரிசக்தித் தேவையை 1,000 ஆண்டுகளுக்கு குறைவின்றி
தீர்த்துக்கொள்ளலாம் என்று அறிவியலாளர்கள் கண்டுபிடித்த காலம் முதல்
நிலவின் மீதான மனிதனின் கவனம் (அரசுகளின் கவனம் என்று கொள்க) அதிகரித்தது.
அதுமுதல் நிலவை அவன் நோக்கிய பார்வையே மாறியது.


21ஆம்
நூற்றாண்டின் மத்திய கிழக்காசியா (எண்ணை வளத்தைப் பெற்ற அரபு நாடுகளைப்
போன்று) நிலவுதான் என்று கூற ஆரம்பித்தனர். 2004ஆம் போட்ட ஒரு
மதிப்பீட்டின்படி, இன்றைக்கு 5.7 மில்லியன் செலவு செய்து உருவாக்கக் கூடிய
எரிசக்தியை ஒரு கிலோ ஹீலியம் 3ஐக் கொண்டு உருவாக்கலாம் என்று
ஒப்பிடப்பட்டது.

No comments: