Search

Custom Search

Monday, April 7, 2008

எனக்கு எதிராக தவறான பிரச்சாரம்: ரஜினி நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்
கர்நாடகாவில் தனக்கு எதிராக சிலர் தவறான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், ஒகேனக்கல் விவகாரம் தொடர்பான பேச்சுக்கு மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து கன்னட தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், 'உதைக்க வேண்டும்' என்று தான் கூறியது தவறாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது. இரு மாநில மக்களையும் அமைதியாக வாழவிடாமல் செய்பவர்களை உதைக்க வேண்டும் என்ரு தான் குறிப்பிட்டதாகக் கூறியுள்ளார்.
எவர் மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் தான் பேசவில்லை என்றும், ஒட்டு மொத்த கன்னடர்களையும் இழிவாகப் பேசுவதற்கு தான் ஒன்றும் முட்டாள் அல்ல என்றும் ரஜினி தெரிவித்தார்.
மன்னிப்பு கேட்காவிட்டால் தனது படம் கர்நாடகாவில் திரையிடமுடியாது என்று கூறுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், இதனால் தனக்கு எந்த நஷ்டமும் இல்லை. கன்னட ரசிகர்கள் தான் வேதனை அடைவார்கள் என்றார்.
மன்னிப்பு கேட்கவேண்டிய அளவுக்கு தான் எந்த தவற்றையும் புரியவில்லை. எனவே மன்னிப்பு கோரப்போவதில்லை என்றார் ரஜினி.
எனினும் நடிகர்கள் அம்பரீஷ், விஷ்ணு வர்த்தன், அஸ்வத், பர்வதம்மா ராஜ்குமார் ஆகியோர், தான் தவறு இழைத்து விட்டதாகக் மன சாட்சியை தொட்டு கூறினால், மன்னிப்பு கேட்கவும் தயங்கப் போவதில்லை என்றார் அவர்.
தனக்கு எதிராக சிலர் கர்நாடகாவில் தவறான பிரச்சாரம் மேற்கொண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இது தன் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது என்றார்.

தமிழக-கர்நாடக போக்குவரத்து சீரானது

ஒகேனக்கல் குடிநீர் திட்ட பிரச்சினையால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழகம் - கர்நாடக மாநிலங்களுக்கு இடையே பாதிப்புக்குள்ளாகியிருந்த பேருந்து போக்குவரத்து நேற்று முதல் சீராக இயங்கத் தொடங்கியது.
இரு மாநிலங்களிலும் பரஸ்பரம் மற்ற மாநில பேருந்துகள் மீது தாக்குதல்கள் நடைபெற்றன.
இதனால் மாநில எல்லைகளான சத்தியமங்கலம், ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் தமிகழத்தில் இருந்து கர்நாடகாவிற்கு செல்லும் அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன.
இதற்கிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு முதல் அமைச்சர் கருணாநிதி, கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடியும் வரை அமைதி காப்போம் என்று கூறியதைத் தொடர்ந்து பதற்றம் தணியத் தொடங்கியது.
இதையடுத்து நேற்று முதல் தமிழக அரசுப் பேருந்துகள், கர்நாடக மாநிலத்திற்கும், அங்கிருந்து தமிழகத்திற்கும் பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன. இதனால் இரு மாநிலங்களுக்கும் செல்லும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பாரீசில் ஒலிம்பிக் தீபம் அணைப்பு

ஒலிம்பிக் தீபம்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக் தீபத்தைக் கொண்டுவருவதற்கு கலவரக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, பாதுகாப்புப் படையினர் திங்கட்கிழமையன்று 2-வது முறையாக தீபத்தை அணைத்தனர்.
பின்னர் அந்த தீபம் மீண்டும் ஏற்றப்பட்டது.
திபெத் விடுதலை கோரி ஒலிம்பிக் தீபத்தை கொண்டு வருவதற்கு பாரீசில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
ஒலிம்பிக் தீபம் பலத்த பாதுகாப்புடன் பேருந்து ஒன்றில் கொண்டுவரப்பட்டது. என்றாலும் கடுமையான எதிர்ப்பின் காரணமாக தடகள வீரர் ஒருவர் சக்கர நாற்காலியில் கொண்டுவந்த தீபத்தை பாதுகாப்புப் படையினர் இன்று 2-வது முறையாக அணைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாரீசில் உள்ள போக்குவரத்து சுரங்கப்பாதையில் இந்த தீபம் கொண்டுவரப்பட்டது.
திபெத்திற்கு ஆதரவாக சிலர் போராட்டத்தில் ஈடுபட்டதால், தீபம் அணைக்கப்பட்டு மீண்டும் ஏற்றப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பின்னர் ஒலிம்பிக் தீபம் தொடர்ந்து கொண்டு செல்லப்பட்டது.

ஒலிம்பிக் தீப ஓட்டம்: சச்சின் பங்கேற்கிறார்

சச்சின் டெண்டுல்கர்
டெல்லியில் நடக்கும் ஒலிம்பிக் தீப தொடர் ஓட்டத்தில் இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் பங்கேற்பார் என்று இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்திருக்கிறார்.
பீஜிங்கில் இந்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான தீபம் உலகின் பல்வேறு நாடுகளிலும் சுற்றுப்பயணம் சென்று விட்டு, வரும் 17-ம் தேதி இந்தியா கொண்டு வரப்படுகிறது.
டெல்லியில் அன்றைய தினம் நடைபெற உள்ள ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் பட்டியலை இந்திய ஒலிம்பிக் சங்கம் இறுதி செய்துள்ளது.
அதன்படி சச்சின் டெண்டுல்கர், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், பாலிவுட் நடிகர்கள் சயீப் அலி கான், சோகா அலி கான், முன்னாள் ஒலிம்பிக் வெற்றியாளர் மில்கா சிங், கோல்ப் வீரர் ஜோதி ரந்தாவா ஆகியோர் இந்த ஓட்டத்தில் பங்கேற்க் உள்ளதாக ஒலிம்பிக் சங்கத் தலைவர் சுரேஷ் கல்மாடி தெரிவித்தார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் தலைமை நிர்வாக அதிகாரி எஸ். ராமதுரை, இங்கிராம் மைக்ரோ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி ஜெய்சங்கர் கிருஷ்ணன், மருத்துவர் வைபவ் பகாரியா ஆகியோரும் பங்கேற்க உள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே இந்தியாவில் ஒலிம்பிக் தீப ஓட்டத்திற்காக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாக மத்திய உள்துறைச் செயலாளர் மதுக்கர் குப்தா தெரிவித்துள்ளார்.
முன்னதாக பாரீசில் ஒலிம்பிக் தீபத்தை எடுத்துச் செல்வதற்கு இன்று திபெத் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் 2 முறை தீபம் அணைக்கப்பட்டது.
இதுதொடர்பாக 37 பேரை பாரீஸ் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.