Search

Custom Search

Wednesday, April 9, 2008

கதை தயார்; தனுஷ் டைரக்டு செய்கிறார்

தனுஷ்
தனது அண்ணன் இயக்கத்தில் அறிமுகமாகி தற்போது முன்னணி இளம் ஹீரோவாகத் திகழும் தனுஷ், அடுத்த ஆண்டில் ஒரு படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார்.
தற்போது சுராஜ் இயக்கும் `படிக்காதவன்' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்புக்கு நடுவே பேட்டியளித்த தனுஷ், தாம் இயக்கவிருக்கும் படத்திற்கான கதையை தயார் செய்து விட்டதாகத் தெரிவித்தார்.
சரி. படத்தில் நீங்களே கதாநாயகனா? என்று கேட்டால், ஊஹூம், வேறு ஒருவரை கதாநாயகனாக நடிக்க வைக்க உள்ளாராம்.
அப்படி வேறு கதாநாயகன் கிடைக்காதபட்சத்தில் தனுஷே நடிப்பாராம்.
படத்தை டைரக்டு செய்யவேண்டும் என்று திடீரென்று முடிவெடுக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே தனக்குள் டைரக்‌ஷன் ஆசை இருந்து வந்ததாகவும், உரிய நேரம் எடுத்துக் கொண்டு இயக்க வேண்டும் என்பதற்காகவே காத்திருந்ததாகவும் தனுஷ் தெரிவிக்கிறார்.

கோவையில் ரூ.320 கோடியில் ஐ.டி. பூங்கா

கோவையைச் சேர்ந்த கேஜிஐஎஸ்எல் குழுமம் இந்தியா லேண்ட் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் முதல் தனியார் தகவல் தொழில் நுட்பப் பூங்காவை அமைக்க உள்ளது.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தியா லேண்ட் நிறுவனத்தலைவர் ஹரீஷ் பாபியானி, கேஜிஐஎஸ்எல் குழும நிர்வாக இயக்குநர் அசோக் பக்தவத்சலம் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர்.
இந்த தகவல் தொழில்நுட்பப் பூங்கா, கோவை சரவணன்பட்டியில் 150 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. 11.74 ஏக்கர் நிலத்தில் மொத்தம் 18 லட்சம் சதுர அடியில் இந்தியா லேண்ட் கேஜிஐஎஸ்எல் தொழில்நுட்பப் பூங்கா உருவாக்கப்பட்டு வருவதாகவும், 320 கோடி ரூபாய் செலவிடப்படும் என்றும் அவர்கள் கூறினர்.
இத்தொகையில் 70 சதவீதத்தை இந்தியா லேண்ட் முதலீடு செய்யும். இதன் முதல் கட்டப் பணிகள் வரும் ஜூலை மாதத்தில் நிறைவடையும். இறுதி கட்டப் பணிகள் அக்டோபர் மாதத்தில் முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பித்த 2 மாதத்தில் ரேஷன் கார்டு

தமிழகத்தில் இனி விண்ணப்பித்த 2 மாதங்களுக்குள் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படும் என்றும், அவ்வாறு வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில உணவுத் துறை அமைச்சர் எ.வ. வேலு கூறியிருக்கிறார்.
சட்டப்பேரவையில் நேற்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்துப் பேசுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தற்போது அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திலேயே குடும்ப அட்டைகள் அச்சிடப்பட்டு வினியோகிக்கப்படுவதாகவும், இதுவரை 12 ஆயிரத்து 619 குடும்ப அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் 9 லட்சம் பேருக்கு முறையாக பதில் கடிதங்கள் எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், விண்ணப்பித்த 60 நாட்களில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்றார்.
மண் எண்ணை கடத்தலைத் தடுக்க குற்றப்புலனாய்வுத் துறையினர் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், கடந்த முதல் தேதியில் இருந்து, இதுவரை 14 ஆயிரத்து 37 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.
தமிழகத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே முதல்-அமைச்சரின் நோக்கம் என்றும், அதனால்தான் ரேஷன் கடைகளில் 1.5.2007 முதல் பருப்பு, கோதுமை, ரவை மற்றும் பாமாயில் ஆகியவை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
பொதுவிநியோகத் திட்டத்தில் முறைகேடுகள் ஏதாவது இருப்பின் அதுபற்றி புகார் தெரிவிக்க கட்டுப்பாட்டு அறைகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

மேம்பாட்டு நடவடிக்கை 'மின்ஆளுமை தொடரும்'

முதல்வர் கருணாநிதி
மின்ஆளுமை (இ-கவர்னன்ஸ்) திட்டத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதற்காக பல விருதுகளைப் பெற்றாலும், மேலும் பல சாதனைகளை புரிய தமிழக அரசு தொடந்து முயற்சி மேற்கொள்ளும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவின் புதிய கட்டிடம், தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் மையம், தமிழ்நாடு பெரும் பரப்பு வலையமைப்பு மையம், தமிழ்நாடு மாநில தரவு மையம், பொது சேவை மையத் திட்டம், ராயப்பேட்டை மருத்துவமனையின் தொலை-மருத்துவ வசதி ஆகியவற்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சென்னை தரமணியில் நேற்று மாலை நடைபெற்றது.
இவ்விழாவில் பங்கேற்று இவற்றை துவக்கி வைத்த முதல்வர் கருணாநிதி, தமிழகத்தின் கணினி மென்பொருள் ஏற்றுமதி 2007-08ம் ஆண்டில் ரூ.26 ஆயிரம் கோடியை எட்டும் என எதிர்பார்ப்பதாக கூறினார்.
தேசியளவில் தகவல்தொழில்நுட்ப கொள்கையை வகுத்த முதல் மாநிலம் தமிழகம் என்றும், நாட்டின் தகவல் தொடர்பியல் மற்றும் தொழில்நுட்ப உற்பத்தியில், தமிழகத்தின் பங்கு வரும் 2011ம் ஆண்டில் 25 சதவீமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
சென்னையில் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா அமைந்ததன் மூலம் தமிழகம் இத்துறையில் முன்னிலை பெறும் என்றும், கோவை, திருச்சி, நெல்லை, மதுரை, சேலம், வேலூர், ஒசூர் பகுதிகளில் விரைவில் தகவல்தொழில்நுட்பப் பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
மின்ஆளுமை திட்டத்தில் முதலிடம் மற்றும் இத்திட்டத்தின் வெற்றிக்காக பல விருதுகளைப் தமிழகம் பெற்றிருந்தாலும், இதனால் திருப்தியடைந்துவிடாமல், மேலும் பல சாதனைகள் புரிய முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சி மக்களின் பொருளாதார வளத்தை மேம்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை என்றும், தமிழ்நாடு பெரும் பரப்பு வலையமைப்பு மற்றும் தமிழ்நாடு மாநில தரவு மையத் திட்டங்களின் மூலம் மக்கள் பெரும் பயனை பெறுவார்கள் என்றும் முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.