Search

Custom Search

Friday, April 18, 2008

நட்புக்கு மரியாதை தரும் ரஜினி

ரஜினிகாந்த்
`புஜ்ஜிகாரு மேட் இன் சென்னை' புதிய தெலுங்குப் படத்தின் ஆடியோ வெளியீடு சென்னையில் நடைபெறுகிறது.
இப்படத்தில் த்ரிஷா, பிரபாஸ் நடித்துள்ளனர். இயக்குனர் புரிஜெகன்னாத், பெரும்பகுதி காட்சிகளை சென்னையில் படமாக்கியுள்ளாராம்.
இதன் ஆடியோவை ரஜினிகாந்த் வெளியிடுகிறாராம். அட, பெரிய விழாக்களையே புறக்கணிக்கும் ரஜினி இதற்கு எப்படி சம்மதித்தார்?
ரஜினியின் நெருங்கிய நண்பர் மோகன்பாபு, இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மோகன்பாபு கேட்டுக் கொண்டதன்பேரில் ஆடியோ ரிலீஸில் பங்கேற்க ரஜினி சம்மதித்தாராம். இதுதான் நட்புக்கு கொடுக்கும் மரியாதையோ?

மியாமியில் திருமண நாள்: ஐஸ்-அபிஷேக் திட்டம்

ஐஸ்வர்யா- அபிஷேக்
பாலிவுட் நட்சத்திர ஜோடியான ஜஸ்வர்யாராய்- அபிஷேக் பச்சன் இருவரும் தங்கள் முதல் திருமண நாளை மியாமியில் கொண்டாட உள்ளனர்.
'தோஸ்தானா' என்ற ஹிந்திப் படத்தின் படப்பிடிப்பிற்காக அபிஷேக் பச்சன் மியாமி சென்றுள்ளதாக தெரிவித்த அபிஷேக்கின் தந்தை அமிதாப்பச்சன், விரைவில் ஐஸ்வர்யாராயும் மியாமி செல்வார் என்றார்.
இதற்கிடையில், ஐஸ்-அபிஷேக் திருமண நாளான ஏப்ரல் 20ம் தேதி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா, அபிஷேக் நடித்த 'சர்க்கார் ராஜ்' படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை, அப்படத்தின் இயக்குனர் ராம்கோபால் வர்மா வைத்துள்ளார்.
மியாமியில் இருந்தபடியே 'ஸ்கை-ஸ்கேப்' என்ற நவீன தொழில்நுட்பம் மூலம் வீடியோ கான்பரன்ஸ் வசதியில், ஐஸ்வர்யா-அபிஷேக் தம்பதியர் இந்த விழாவில் பங்கேற்பர் என்றும் ராம்கோபால் வர்மா தெரிவித்துள்ளார்.

நாசிக், வதோதராவில் சன் எஃப்.எம்

சன் டி.வி. குழுமத்தில் அடங்கிய சன் எஃப்.எம் மகாராஷ்டிராவில் தனது காலடியை எடுத்து வைத்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கிலும், குஜராத்தின் வதோதராவிலும் எஸ் எஃப்.எம். என்ற பெயரில் சன் பண்பலை வரிசை தொடங்கப்பட்டுள்ளது.
93.5 மெகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் இதனைக் கேட்டு மகிழலாம். சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் எஸ் எஃப்.எம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு பண்பலை நிலையங்களையும் சேர்த்து மொத்தம் 32 எஃப்.எம் நிலையங்களை சன் குழுமம் செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் மொத்தம் 45 பண்பலை வரிசைகளைத் தொடங்க அனுமதி பெற்றிருப்பதாக சன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் மொத்தம் 20 தொலைக்காட்சி அலைவரிசைகளையும் சன் நெட்வொர்க் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

'மின்னணு கழிவு அதிகரிக்கும் அபாயம்'

பொருளாதார வளர்ச்சி மற்றும் மின்னணு பொருள் பயன்பாடு அதிகரிப்பால், நாட்டின் மின்னணு கழிவு (E-waste) வரும் 2012ம் ஆண்டில் 8 லட்சம் டன்னாக உயரும் என வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் நமோ நாராயண் மீனா தெரிவித்துள்ளார்.
மக்களவையில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த போது இத்தகவலை தெரிவித்த அவர், மின்னணு கழிவுகளால் ஏற்படும் அபாயத்தை அரசு உணர்ந்துள்ளதாகவும், இதனை குறைக்க மறுசுழற்சி முறையை சிறப்பாக செயல்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.
பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நாட்டு மின்னணு கழிவுகளை இந்தியாவில் கொட்டுவதாக எழுந்துள்ள புகார் குறித்த கேள்விக்கு, அபாயகரமான மின்னணு கழிவுகளை இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிப்பதில்லை என தெரிவித்த அவர், இவ்விஷயத்தில் அரசு கடுமையான விதிகளை வகுத்துள்ளதாக பதிலளித்தார்.
கடந்த 2005ம் ஆண்டில் நாட்டின் மின்னணு கழிவு 1.5 டன்னாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

குறைந்த விலை லேப்டாப்: ஹெச்சிஎல் அறிமுகம்

இந்திய சந்தைகளில் குறைந்த விலை மடிக்கணினிகளை (லேப்-டாப்) அறிமுக்கப்படுத்தும் நடவடிக்கையில் ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டம் நிறுவனம் களமிறங்கியுள்ளது.
கணினி தயாரிப்பு நிறுவனங்கள் குறைந்த விலை தனிநபர் கணினி விற்பனை சந்தையில் குறிப்பிடத்தக்க வெற்றியை சந்தித்துள்ள நிலையில், குறைந்த விலை மடிக்கணினி தயாரிப்பிலும் அடுத்த கட்டமாக இறங்கியுள்ளன.
இதன் ஒருபகுதியாக ஹெச்சிஎல் நிறுவனமும், மைக்ரோசாப்ட் கார்ப்ரேஷனுடன் இணைந்து குறைந்த விலை மடிக்கணினிகளை அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கணினி விற்பனை சந்தை அபரிமித வளர்ச்சியடைய உள்ளதாக தெரிவித்த ஹெச்சிஎல் இன்ஃபோசிஸ்டம் தலைவர் அஜய் சவுத்ரி, குறைந்த விலை கணினியை அறிமுகம் செய்வதன் மூலம் இத்துறையில் ஹெச்சிஎல் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் எனக் கூறினார்.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தை உள்ளடக்கிய ஹெச்சிஎல் மைலீப் (Mileap) வகை மடிக்கணினிகளின் விலை ரூ.16,990 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.