
கமல்ஹாசன் 10 வேடங்களில் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் `தசாவதாரம்' படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் திரையிட விடமாட்டோம் என்று இந்து முன்னணி கூறியுள்ளது.
இந்தப் படத்தில் சைவ, வைணவ சமயங்களுக்கு இடையே 16-ம் நூற்றாண்டில் ஏற்பட்ட மோதலை காட்சியாக்கி இருப்பதாகத் தெரிகிறது. சாமி சிலைகள் சேதப்படுத்துவது போன்ற சர்ச்சைக்குரிய காட்சிகளை சேர்த்திருப்பதாக தெரிய வந்திருப்பதாகவும், அதுபோன்ற காட்சிகளை மாற்ற வேண்டும் என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
அதுபோன்ற காட்சிகளை அனுமதிக்கக் கூடாது, நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் `தசாவதாரம்' திரைப்படத்தை பொதுமக்கள் துணைகொண்டு, இந்து முன்னணி போராடி தடுக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
தசாவதாரம் பாடல் வெளியீட்டு விழாவில் அரைகுறை ஆடையுடன் வந்த நடிகை மல்லிகா ஷெராவத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல், ஆடை அவரவர தனிப்பட்ட விஷயம் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் இந்து முன்னணி அமைப்பாளர் அதில் குறிப்பிட்டுள்ளார்.