Search

Custom Search

Thursday, July 3, 2008

ஜேம்ஸ்பாண்ட் ஆக ரஜினி; குசேலனில் அசத்தல்

'குசேலன்' ரஜினி
சூப்பர் ஸ்டார் ரஜினியில் 'குசேலன்' வழக்கம் போல் அவரது படத்திற்கே உரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. படம் குறித்த தகவல்கள் உங்களுக்காக...

'கதபறயும்போள்' படத்தின் ரீ-மேக். அதில் மம்முட்டி நடித்த காட்சிகள் படத்தில் 8 சீன்களே வரும். தமிழில் நடிப்பது ரஜினி என்பதால், 3வது சீனிலிருந்து கடைசி காட்சி வரை வரும்படி கதையை மாற்றி எழுதியுள்ளார் இயக்குனர் பி.வாசு.

கிராமத்து ஏழை பார்பர் பாலனாக பசுபதி. அவரது மனைவி ஸ்ரீதேவியாக மீனா. இவர்களுக்கு 3 குழந்தைகள். வறுமையான சூழலில், சூப்பர் ஸ்டார் அசோக்ராஜ் (ரஜினி) பாலனின் பால்ய நண்பன் என தெரிய வருகிறது.

நண்பனிடம் உதவி கேட்கச் சொல்லி பாலனை சுற்றமும் நட்பும் வற்புறுத்துகிறது. பாலனின் தன்மானம் அதனை தடுக்கிறது. பாலன், அசோக்ராஜ் சந்திப்பு நிகழ்ந்ததா? பாலனின் வறுமை நீங்கியதா என்பது நெகிழ்ச்சியான கிளைமாக்ஸ்.

கவிதாலயா, செவன் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. நயன்தாரா ரஜினி ஜோடியாக நடித்துள்ளார். காமெடிக்கு வடிவேலு.

ரஜினி இதில் பதினான்கு கெட்டப்புகளில் வருகிறார். ஜேம்ஸ்பாண்ட் கெட்டப் அதிலொன்று. சினேகா, குஷ்பு போன்ற முன்னணி நடிகைகள் இடம்பெறும் பாடல் காட்சியும் படத்தில் உண்டு.

இசை ஜி.வி. பிரகாஷ். படத்தில் மொத்தம் 5 பாடல்கள். இதில் மூன்றில் ரஜினி நடித்துள்ளார். நயன்தாரா, ரஜினி இடம் பெறும் பாடல் காட்சியை எகிப்து பிரமிடு போன்ற செயற்கை அரங்கில் பிரமாண்டமாக எடுத்துள்ளனர்.

சினிமா குறித்து வாலி எழுதிய பாடலில் ரஜினி ரசிகர்களையும் நடிக்க வைத்துள்ளார் பி.வாசு. அரவிந்த் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

லேன் இணைப்பு செல்போன்: நோக்கியா அறிமுகம்

நோக்கியா கார்ப்பரேஷன் நிறுவனம் லேன் தொழில்நுட்ப அடிப்படையில் செல்போன்களை ஜப்பானில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

ஜப்பானில் மற்ற சிறிய நிறுவனங்கள் இதே தொழில்நுட்பத்தின் கீழ் செல்போன்களை வழங்கியிருக்கும் நிலையில், நோக்கியாவும் பொது வயர்லெஸ் மூலமாக LAN தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, செல்பேசி சாதனங்களை அறிமுகப்படுத்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் அதிநவீன செல்போன் சந்தையான ஜப்பானில் சுமார் 1 சதவீதத்திற்கும் குறைவான சந்தை பங்களிப்பை நோக்கியா கொண்டுள்ளது.

லோக்கல் ஏரியா நெட்வொர்க் சேவையை நோக்கியா எக்ஸ்02என்கே மாடல்களுக்கு அளிப்பதுடன் ஜப்பானின் சாஃப்ட்பேங்க் கார்ப்பரேஷனுக்கும் வழங்கும் என்று நோக்கியா வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

டாப்-100 பட்டியலில் 6 இந்திய ஐ.டி. நிறுவனம்

உலகின் 100 முன்னணி ஐ.டி நிறுவனங்கள் பட்டியலில் இந்தியாவின் 6 முக்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி தேக்கநிலையை எட்டியிருக்கும் நிலையிலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல் உள்பட 6 இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் பிசினஸ் வீக் நடத்திய கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ளன.

பிசினஸ் வீக் இதழ் ஆண்டுதோறும், தி இன்ஃபோடெக் 100 என்ற தரவரிசைப் பட்டியலை வெளியிடுகிறது. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிதிப் பரிவர்த்தனை, பங்குகள் மதிப்பு, மொத்த வருவாய் போன்றவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

இதில் பார்தி ஏர்டெல் 21 வது இடத்திலும், ரெடிங்டன் இந்தியா 55வது இடத்திலும், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் 66-வது இடத்திலும் வருகின்றன.

அமேஸான். காம், ஆப்பிள் நிறுவனங்கள் முதல் 2 இடங்களைப் பிடித்துள்ளன.

அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் குறைந்துள்ளதாகவும், அமெரிக்காவின் 33 நிறுவனங்களே இந்த ஆண்டில் இடம்பிடித்துள்ளதாகவும், 2007ல் இது 43 ஆக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விப்ரோ (74ம் இடம்), சத்யம் (91), ஹெச்சிஎல் (95) ஆகியவை மற்ற இந்திய ஐ.டி நிறுவனங்களாகும்.

இந்தப் பட்டியலில் சீனாவைச் சேர்ந்த 6 நிறுவனங்களும் இடம்பிடித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.