நமது நாட்டில் வட கிழக்கு மாநிலங்களைத் தவிர பிற பகுதிகளில் நாளை பகுதி சூரிய கிரகணம்தான் தெரியும் என்று டெல்லி நேரு கோளரங்க இயக்குநர் ரத்தினஸ்ரீ தெரிவித்துள்ளார். "
வட கிழக்கு மாநிலங்களில் கூட மாலை 4 மணி முதல் பகுதி கிரகணம்தான் தெரியும். அது முழுமையடைவதற்குள் சூரியன் மறைந்து விடும் என்பதால் முழு கிரகணத்தையும் காண்பதற்கு வாய்ப்பில்லை" என்றார் அவர். சூரிய கிரகணத்தின் கடைசி கட்டத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் காணலாம். நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களில் சூரியன் மறைந்துவிடும் என்பதால், அதையும் காண முடியாது. நமது நாட்டில் அதிகபட்சமாக சூரிய கிரகணக் காட்சியை அஸ்ஸாம் மாநிலம் சிப்சாகரில் காண முடியும். சூரிய கிரகணம், தலைநகர் டெல்லியில் மாலை 4.03 மணிக்குத் துவங்கி 5.56 மணிக்கு முடிகிறது. 5.02 மணிக்கு அதிகபட்சமாக மறைக்கப்பட்ட சூரியனைக் காண முடியும். மும்பையில் மாலை 4.27 மணி முதல் 6.03 மணி வரையும், சென்னையில் 4.40 மணி முதல் 6.07 வரையும், கொல்கத்தாவில் 4.18 முதல் 6.02 வரையும் மேகங்கள் இல்லாவிட்டால் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். உலகில் கனடா முதல் வடக்கு கிரீன்லாந்து வரையும், ஆர்க்டிக் வட்டம், மத்திய ரஷ்யா, மங்கோலியா, சீனாவின் வட பகுதிகளில் முழுமையான சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அடுத்த சூரிய கிரகணம் 2009, ஜனவரி 26 இல் வருகிறது. அதுவும் நமது நாட்டில் பகுதிதான் தெரியும். கிழக்கு, தெற்கு இந்தியாவில் ஓரளவிற்குப் பார்க்க முடியும்.
ஒகேனக்கல் விவகாரத்தில் கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்தியதற்காக நடிகர் ரஜினிகாந்த் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லாவிடில் கர்நாடகத்தில் 'குசேலன்' படம் திரையிடப்படுவதைத் தடுத்து போராட்டம் நடத்துவோம் என்று கன்னட அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. பெங்களூரில் உள்ள கர்நாடகா பிலிம் சேம்பர் முன்பு பெருமளவில் கூடிய கன்னட ரக்ஷன வேதிகா அமைப்பினர், ரஜினிகாந்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். "
ரஜினிகாந்தி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிடில், என்ன விலை கொடுத்தாவது கர்நாடக மாநிலத்தில் எங்கும் ரஜினியின் குசேலன் படம் திரையிடப்படுவதைத் தடுப்போம்" என்று கூறிய அவ்வமைப்பின் பேச்சாளர், "மீறி படம் திரையிடப்பட்டால் வன்முறை வெடிக்கும்" என்று எச்சரித்தார். இந்த வாரத் துவக்கத்தில் கர்நாடகா பிலிம் சேம்பருக்கு ரஜினி எழுதியுள்ள கடிதத்தில், கன்னடர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்றும், தனது படம் திரையிடப்படுவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்நிலையில் போராட்டத்தைத் துவங்கியுள்ள கன்னட அமைப்புகள், "ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கர்நாடக அரசிற்கு எதிராகத் தமிழகத் திரையுலகத்தினர் நடத்திய போராட்டத்தில் பங்கேற்றுப் பேசிய ரஜினி, கன்னடர்களை தரக்குறைவாகப் பேசிவிட்டார். அவமானப்படுத்திவிட்டார்." என்று குற்றம்சாற்றியுள்ளன.