Search

Custom Search

Monday, January 5, 2009

மேலும் 2 வங்கிகள் மூலம் ஆன்லைன் மின்கட்டணம்

சென்னையில் இணைய
தளம் மூலம் வீட்டில் இருந்தே மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதி மேலும் 2
வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை மாநில மின்துறை அமைச்சர்
ஆற்காடு வீராசாமி இன்று தொடங்கிவைத்தார்.


ஆன்லைனில்
மின்சாரக் கட்டணம் கட்டும் வசதி ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி
வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை இன்று
சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி
தொடங்கி வைத்தார்.


குறைந்த
மின் அழுத்த இணைப்பு பயன்படுத்தும் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த
மின்வாரிய வசூல் மையங்களுக்கு சென்று பணம் கட்டுகிறார்கள். கடைசி நாளில்
தான் பெரும்பாலான மக்கள் பணம் செலுத்தச் செல்வதால் கூட்டம் அதிகமாகி நீண்ட
வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக நிகழ்ச்சியில் பேசுகையில்
ஆற்காடு வீராசாமி குறிப்பிட்டார்.


இதனைக்
கருத்தில் கொண்டு, கடந்த 1.4.08 முதல் 24 மணி நேரமும் பணம் செலுத்தும்
வகையில் கனரா வங்கி உதவியுடன் சென்னையில் எந்த நேரமும் பணம் கட்டும்
வசதியை அறிமுகப்படுத்தியதாகவும், தற்போது இந்த சேவையில் ஐசிஐசிஐ, இந்தியன்
வங்கிகளும் பங்கு கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.


தற்போது
கும்மிடிப்பூண்டி முதல் மரக்காணம் வரை பயனடையும் வகையில்
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும்
விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.

இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் யானையிறவு

இலங்கையில்
எல்டிடிஈ-யினர் வசமிருந்த கிளிநொச்சியை அந்நாட்டு இராணுவம் கைப்பற்றிய சில
தினங்களில், யானையிறவுப் பகுதியையும் புலிகளிடம் இருந்து அரசுப் படையினர்
கைப்பற்றியிருக்கிறார்கள்.


விடுதலைப்புலிகளின்
அரசியல் - ராணுவ அதிகார மையமாக விளங்கிய கிளிநொச்சியை, இலங்கை அரசுப்
படையினர் சுற்றிவளைத்து பிடித்ததுடன், புலிகளிடம் இருந்து வடக்குப்
பகுதியான யானையிறவும் தங்கள் கட்டுப்பாட்டில் வந்திருப்பதாக அந்நாட்டு
அரசு தெரிவித்துள்ளது.


கொழும்பில் இருந்து 350 கி.மீ. வடக்கே உள்ளது கிளிநொச்சி. யானையிறவானது கிளிநொச்சியில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் உள்ளது.

யானையிறவு
தங்கள் கட்டுப்பாட்டில் வந்திருப்பதன் மூலம் யாழ்ப்பாணம் - கண்டி இடையேயான
முக்கிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து எளிதில் மேற்கொள்ளலாம் என்றும்,
யாழ்ப்பாணத்திற்கு அரசுப் படையில் செல்வது எளிதாகும் என்றும் இராணுவ
வட்டாரங்களை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.


தொடந்து
கிளிநொச்சி மற்றும் பராந்தன் பகுதிகளில் இருந்து வடக்கு நோக்கி 2 கி.மீ.
தொலைவில் இராணுவப் படையினர் முன்னேறிக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள்
தெரிவிக்கின்றன.


அரசுப் படையினரை எதிர்த்து விடுதலைப்புலிகள் கடுமையாகப் போராடி வந்தாலும், புலிகள் பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

கடந்த 2000ஆவது ஆண்டில் யானையிறவை தங்கள் கட்டுப்பாட்டில் விடுதலைப்புலிகள் கொண்டு வந்தனர்.

தற்போது அரசுக் கட்டுப்பாட்டில் யானயிறவு வந்திருப்பதன் மூலம், புலிகளுக்கு எதிரான தாக்குதலில் அரசு முன்னேறி வருவதாக தெரிகிறது.