Search

Custom Search

Monday, January 26, 2009

18 வயதான அனைவருக்கும் அடையாள அட்டை

18 வயதான அனைவருக்கும் அடையாள அட்டை
இ‌ந்‌தியா‌வி‌ல் 18 வயதுக்கு
மேற்பட்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க அதிரடியான திட்டம் ஒன்றை
ம‌த்‌திய அரசு ‌தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளது.


தீ‌விரவா‌திக‌‌ளி‌ன்
ஊடுருவலை‌த் தடு‌க்கு‌ம் வகை‌யி‌ல்
செய‌ல்படு‌த்த‌ப்பட உ‌ள்ள இ‌ந்த
‌தி‌ட்ட‌ம் வரு‌ம் 2011-ம் ஆண்டுக்குள்
நட‌த்‌தி முடி‌க்க தீவிர ஏற்பாடுகளை மத்திய அரசு செய்து
வருகிறது.


மும்பையில்
பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடல் வழியாக ஊடுருவி வந்து தாக்குதல் நடத்திய
சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில்
கடந்த 20-ந் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சக‌ம் ஏ‌ற்பாடு
செ‌ய்‌திரு‌ந்த உயர் அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம்
நடைபெ‌ற்றது. மத்திய அரசின் உயர் அதிகாரிக‌ள் பலரு‌ம் இந்த
கூட்டத்தில் பங்கேற்றனர்.


தமிழகத்தின்
சார்பில் இந்த கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை செயலாளர் லீனா நாயர், தமிழக
கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.ஜி.பி. ஜெகன் சேஷாத்திரி ஆகியோர் கலந்து
கொண்டனர்.


இந்த
கூட்டத்தில் பல்வேறு திட்டங்களை அமல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் பல மு‌க்‌கிய முடிவுக‌ள்
எடு‌க்க‌ப்ப‌ட்டன.


அ‌தி‌ல்,
தேசிய மக்கள் தொகை பதிவு திட்டத்தின் அடிப்படையில், நாடு முழுவதும் 15
வயதுக்கு மேற்பட்ட ஆண்-பெண் அனைவருடைய எண்ணிக்கையையும் உடனடியாக
கணக்கெடுக்க வேண்டும். இவர்களில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
வாக்காளர் அடையாள அட்டையை போல, தேசிய பல்நோக்கு அடையாள அட்டை என்ற அடையாள
அட்டையை வழங்க வேண்டும். இந்த அடையாள அட்டையில் அடையாள அட்டைக்குரிய
நபரின் பெயர், வயது, நிரந்தர, தற்காலிக முகவரி, தந்தையின் பெயர் போன்ற
விவரங்களோடு அட்டைதாரரின் புகைப்படம் மற்றும் கைரேகையையும் பதிவு செய்ய
வேண்டும்.


முதல்
கட்டமாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்
இந்த அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வேண்டும். கடலோர பகுதி மக்களுக்கு
அடையாள அட்டை வழங்கும் பணி முடிந்தவுடன், மற்ற பகுதியில் வசிக்கும்
மக்களுக்கும் அடுத்தகட்டமாக அடையாள அட்டையை வழங்கும் பணியை தொடங்க
வேண்டும். அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை 2011-ம் ஆண்டு மக்கள் தொகை
கணக்கெடுக்கும் பணி தொடங்குவதற்கு முன்பு முடித்துவிட வேண்டும்.


இந்த
திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முழு செலவையும் மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.
மாநில அரசுகள் இந்த திட்டத்தை நிறைவேற்ற முழு ஒத்துழைப்பு கொடுக்க
வேண்டும். வருகிற பிப்ரவரி 1-ந் தேதிக்குள் கடலோர பகுதிகளில் வசிக்கும்
மக்கள் பற்றிய விவரங்களை அந்தந்த மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி
வைக்க வேண்டும்.


இந்திய
எலக்ட்ரானிக் கழகம் உள்பட மத்திய அரசின் 3 நிறுவனங்கள் மூலம் இந்த அடையாள
அட்டை வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். அடையாள அட்டையின்
வடிவ‌ம் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும் எ‌ன்று முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்படுகிறது

இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்படுகிறது
இலங்கையில்
பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டு வருவதாகவும், பத்திரிக்கையாளர்கள் மீது
போடப்பட்டிருக்கும் பொய் வழக்குகளை உடனடியாக திரும்பப் பெறுமாறு
உத்தரவிடக் கோரி இலங்கை அரசுக்கு சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு
வலியுறுத்தியுள்ளது.


நியூயார்க்கில்
செயல்பட்டு வரும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, இலங்கை அதிபருக்கு
அனுப்பியுள்ள கடிதத்தில், பத்திரிக்கையாளர்கள் மீது அரசியல்
காழ்ப்புணரச்சி காரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும்
உடனடியாக கைவிடப்பட வேண்டும் என்று அதிபர் மஹிந்தா ராஜபக்சே உத்தரவிட
வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.


மேலும்
அந்த கடிதத்தில், பத்திரிக்கையாளர் ஜே.எஸ். திசைநாயாகம், வெளியீட்டாளர்
என். ஜஷிஹரன் மற்றும் அவரது மனைவி வி. வளமதி ஆகியோர் மீது பொய் வழக்குகள்
பதிவாகியிருப்பது குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.


"திசைநாயகத்தின்
கைது முற்றிலும் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே நடைபெற்றுள்ளது" என்று
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியா பிரிவு இயக்குநர் பிராட்
ஆடம்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


கடந்த
சில மாதங்களாக இலங்கையில் பத்திரிக்கை சுதந்திரம் மீறப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர் லசந்தா விக்ரமதுங்கா கொலை செய்யப்பட்டதும், கொழும்புவில்
உள்ள மஹாராஜா தொலைக்காட்சி அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்டதும் அதற்கு
சரியான முன்னுதாரணங்களாக உள்ளன.

பிரதமருக்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டது

பிரதமருக்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டது
இருதய வால்வுகளில்
இருக்கும் அடைப்புகளை அகற்ற பைபாஸ் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிரதமர்
மன்மோகன் சிங்கிற்கு வென்டிலேட்டர் நீக்கப்பட்டு சுயமாகவே சுவாசித்து
வருவதாக அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.


76 வயதாகும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இருதய வால்வுகளில் பல அடைப்புகள் இருந்ததால் நேற்று பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

தற்போது
அவரது நினைவு திரும்பிவிட்டார் என்றும், தனது குடும்பத்தார் மற்றும்
மருத்துவர்களை பார்த்தார் என்றும் மும்பையின் ஆசியன் இருதய மையத்தின்
மருத்துவர் ராமாகாண்ட் பாண்டா கூறினார். இவர் தான் பிரதமருக்கு அறுவை
சிகிச்சை செய்த மருத்துவர்களின் குழுவின் தலைவர் ஆவார்.


மன்மோகன்
சிங்கின் உடல்நிலை வேகமாக குணமடைந்து வருவதாகவும், அவருக்கு
பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டரையும் மருத்துவர்கள் நீக்கி விட்டனர்
என்றும் அவர் கூறினார். மேலும், வென்டிலேட்டரை நீக்குவதுதான் அறுவை
சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்படும் முக்கிய செயல் என்றும் மருத்துவர்
பாண்டா கூறினார்.